கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில்  உள்ள வட மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை மற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் வடக்கில் அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சுகாதார தரப்பினர்கள், எதிர்வரும் நாட்கள் நெருக்கடி மிக்கதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிருஸ்ணபுரம் தொற்றுநோய் வைத்தியசாலை மற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலைகள் முழுவதுமாக நோயாளிகளால் நிரம்பியிருப்பதனால் தற்போது முறுகண்டியில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அங்கு பெண்கள் மாத்திரமே அனுப்ப முடியும் எனவும் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று(03.08.2021) 68 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மாவட்டத்தில் முழங்காவில்,ஜெயபுரம், கரைச்சி, கண்டாவளை என மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் தொடக்கம் இன்று வரையான காலத்தில் 445 பேருக்கு மேல் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்.