பத்திரிகை உலகில் இன்று "வீரகேசரி" 91 வது ஆண்டில் வீரநடைபோட்டு முன்னணியில் திகழ்கிறது. இன்று புதிய பத்திரிகைகள் வெளிவருகின்றன.

சில  இடை நடுவில் மூடப்படுகின்றன. சில பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றன. உண்மை, நேர்மை, துணிவுடன் சரியான தகவல்களை செய்திகளாக பக்கச்சார்பின்றி பல சவால்களுக்கும் மத்தியிலும் "வீரகேசரி" ஆரம்பகாலம் முதல்  இன்று வரையும் வெளியிட்டுவருவதால் தமிழ் பேசும் மக்கள் மனதை என்றுமே விட்டகலாத ஒரு சிறந்த,அதிக விற்பனையாகும் பத்திரிகையாக திகழ்கிறது. இணையத்தளங்கள்,நவீன ஊடகங்கள் வருவதற்கு முன்னர் அச்சு ஊடகங்கள் காலத்தில் மட்டுமன்றி,தற்போது அவை வந்த பின்னரும் வீரகேசரி சிறப்பாகவே ஊடகப்பணியை முன்னெடுத்துச்செல்கி றது.இன்று உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அதிகமாக படிக்கின்றனர்.

சில தமிழ்ப்பத்திரிகைகள் ஒரு முக்கியமான நிகழ்வை,அல்லது திடீர் சம்பவத்தை வெளியிட்டதும்,தாமே முதலில் பிரசுரித்தோம் என்று தம்மை புகழ்கின்றன. ஆனால், வீரகேசரி அவ்வாறு தன்னைப் புகழ்ந்ததில்லை என்பதை அதன் பல செய்திகளின் மூலம் அறியலாம். உதாரணமாக 1978 இல் இரகசிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை,மேயர் துரையப்பா படுகொலை உட்பட சில சம்பவங்களுக்கு உரிமை கோரிய புலிகளின் அறிக்கையை  வீரகேசரியே  பிரசுரித்தது. இவ்வறிக்கையை புலிகள் வீரகேசரிக்கே அனுப்பியிருந்தனர். இதன் மூலம் வீரகேசரி தமிழ் மக்களால் அதிகமாக விரும்பி படிக்கும் பத்திரிகை என்பதை அறியலாம். 

யாழ்.குடாநாட்டு மக்கள் வீரகேசரியை ஆரம்பகாலத்திலிருந்தே அதிகமாக படித்து வருகின்றனர்.ஞாயிறு வீரகேசரியின் கட்டுரைகள், இலக்கிய அம்சங்கள் போற்றத்தக்கவை. சிறுவர்களுக்கான  "டார்சான்" போன்ற சித்திரக்கதைகளை   மறக்கமுடியாது. பாடசாலைகள், நூலகங்கள், அரச அலுவலகங்கள் எங்கும் வீரகேசரியை காணலாம்.

கொழும்பு பத்திரிகைகள் வடக்கே வருவது 1984 யுத்த சூழலால் தடைப்பட்டது. பழைய ஈழநாடு பத்திரிகை மட்டுமே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருந்தது. 1984 "ஈழமுரசு" பத்திரிகை வெளிவந்தது.வீரகேசரியை யாழ்ப்பாணத்தில் தனியாக அச்சிட்டு வெளியிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்து, பாரிய அச்சு யந்திரமும் அனுப்பிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வீரகேசரி வெளிவரப்போகிற  தகவல் குடாநாடு,வன்னி   எங்கும் காட்டுத்தீபோல பரவியதால் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்தனர். முகவர்களிடம் முன்கூட்டியே பதிவுசெய்தனர்.

யாழ்ப்பாணத்தில் வெளியாவது மகிழ்ச்சி! தமிழ் வளரும்!வாசிப்பு ஒருவனின் அறிவை வளர்க்கும்! என்று பேராசிரியர் கா.சிவத்தம்பியும், எதிர்காலத்தில் எமது பிள்ளைகளின் வாசிப்பு திறன், ஞாபசக்தி, கிரகித்தல் போன்றவை அதிகரிக்கும் என பேராசிரியர் சு.வித்தியானந்தனும் கூறினர். யாழ்.அலுவலக நிருபர் அமரர் காசி நவரத்தனம் கச்சேரிக்கு சென்றபோது அரசாங்க அதிபர் மு.பஞ்சலிங்கம் உட்பட பல அதிகாரிகள் வீரகேசரி யாழ்.பதிப்புக்கு பாராட்டி வாழ்த்தினார்கள்.

இதனால் இரு யாழ்.பத்திரிகைகள் பாதிக்கப்படுமா? என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.விநியோகம்,பத்திரிகை மடித்தல், போன்ற வேலை வாய்ப்புக்கு  இளைஞர்கள் நம்பினர்.ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்க்குழு ஒன்று இதற்கு தடை விதித்து,கொண்டுவரப்பட்ட அச்சு யந்திரத்தை எடுத்துக்கொண்டதால் வீரகேசரி யாழ்.பதிப்பு திட்டமிட்டபடி இடம்பெறவில்லை.இச்சம்பவத்தால் குடாநாட்டு மக்கள் கவலையடைந்தனர்.

அனுதாபப்பட்டனர்.இன்று அந்தக்குழு ஊடக சுதந்திரம் குறித்து இன்று குரல்கொடுக்கிறது.

1987 இல் இந்திய அமைதிப்படையினர் வருகைக்கு பின்னர் யந்திரம் மீளப்பெறப்பட்டது.அப்பணி தொடர்ந்திருந்தால்,இன்று யாழ்ப்பாணத்தில் சிறந்த ஊடகமாக வீரகேசரி வளர்ச்சியடைந்திருக்கும்.குடாநாட்டில் மட்டுமல்ல வன்னி,மன்னார் மாவட்டங்களிலும் அமோக விற்பனையாக திகழும்.பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

வீரகேசரியின் ஆண்டு  தினங்களில் பலரும் வாழ்த்திவருகின்றனர்.ஒரு வாசகன் என்ற முறையில் வீரகேசரியில் வெளியான சில முக்கிய செய்திகளை சுருக்கமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

1954 நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்த சாதனை.

1956 தனிச்சிங்கள சட்டம்,1957 பண்டா - செல்வா ஒப்பந்தம்.1958 இனவன்முறைகள், 1959 பிரதமர் பண்டாரநாயக்கா படுகொலை! வழக்கு.சோம

ராம தேரருக்கு தூக்கு தண்டனை!புத்தரகித்த தேரருக்கு  ஆயுள் தண்டனை. 1961 தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரம்.தமிழரசு எம்.பிக்கள் கைதாகி ஆறு மாதங்கள் பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக்காவல். 1961 கத்தோலிக்க,கிறிஸ்தவ பாடசாலைகளை சுதந்திரக்கட் சி  அரசு சுவீகரித்தது. 1971 ஏப்ரல் 5 ஜே.வி.பியின் ஆயுதப்போராட்டம்.றோகண விஜேவீர யாழ்.கோட்டையில் சிறைவைப்பு.தமிழரசுக்கட்சியின் சிங்கள ஶ்ரீ  போராட்டம்,சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி! எனப்பல வரலாற்று நிகழ்வுகளை "வீரகேசரி" விலாவாரியாக வெளியிட்டிருந்தது.

வவுனியா எம்.பி.பேராசிரியர் செ.சுந்தரலிங்கம் வீரகேசரி பத்திரிகைகளை  சேகரித்து வைத்திருந்தார்.இவற்றை எதிர்காலத்தில் பலரும் படிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் என அவருடன் பழகியவர்கள் கூறினார்கள்.அவரைப்போலவே தமிழ்த்தலைவர்கள் பலரும் வீரகேசரி பிரதிகளை சேகரித்து வைத்திருந்தனர். பாராளுமன்றத்தில் தமிழ்த்தலைவர்களின் 1970க்கு முன்பான ஆங்கிலத்திலான பேச்சுக்களும் அழகு தமிழில் வீரகேசரியில் வெளிவந்தன. வேறு பலரிடமும் பழைய வீரகேசரி பிரதிகள் இன்றும் உள்ளன.

என் நினைவுக்கு வருவது 1962 ஜனவரி 17 பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சி முயற்சி. பிரதமர் கதிர்காமத்தில் இருந்து கொழும்பு வரும்போது கைது செய்து, ஆட்சியை கைப்பற்றுவது. இராணுவ,பொலிஸ்,கடற்படை உயர் அதிகாரி கள் 24 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.அன்றைய மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணத்திலக்காவும் இதில் சம்பந்தபட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணை அன்று பிரபல்யாமானது.பிரபல குற்றவியல் சட்டத்தரணி ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூ.சி சில எதிரிகளுக்காக வாதிட்டார்.

ஆங்கிலத்தில் இடம்பெற்ற விசாரணையில் அவரது குறுக்கு விசாரணையை கேள்வி- பதிலுடன் தமிழில் தெளிவாக வெளியிட்டது.இந்த வழக்கு நேரம் வீரகேசரி நாடு முழுவதும் அமோக விற்பனை.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பல வழக்குகளை வீரகேசரி பிரசுரித்தது. காலியில் டாக்டர் குலரட்னா என்பவர் தனது மனைவி பத்மினிக்கு ஆசனிக் அமிலம் கலந்த உணவைக்கொடுத்து கொலை செய்ததாக வழக்கு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் டாக்டருக்காக வாதிட்டார். ஆசனிக் அமிலம் பயன்படுத்தப்படுவது குறித்து ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் குறுக்கு விசாரணை. அனுராதபுரம் களத்தாவை இரட்டைக்கொலை வழக்கிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிரிக்காக வாதிட்டார். கலைஞர் கருணாநிதிக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆஜராகி வாதிட்ட செய்தி. 1966 ஜூலை ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு எதிரான இராணுவ சதி முயற்சி. அன்றைய இராணுவத்தளபதி ரிச்சார்ட் உடுகம லண்டனில் இருந்து நாடு திரும்பியதும்,கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது.அவருடன் முன்னாள் பாதுகாப்பு செயலர் என்.கியூ.டயஸ் மீது வழக்கு விசாரணை.

ஆங்கிலத்திலான விசாரணையை  வீரகேசரி சிறப்பாக வெளியிட்டிருந்தது.

1976 தமிழரசு தலைவர்கள்,அமிர்தலிங்கம்.க.பொ.இரத்தனம்.வீ.என்.நவரத்தினம் அவசரகாலச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில்  கைதான வழக்கு விசாரணையிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாதிட்டிருந்தார்.இச்செய்தி முன்பக்கத்தில் பிரசுரமானது.

வடக்கில் 1962 இல் பிரபல்யமான கிளிநொச்சி- உருத்திரபுரம் கோயில் ஐயர் கொலை வழக்கு விசாரணையை வீரகேசரி விபரமாக வெளியிட்டது.

ஐயர் காசிலிங்க சர்மாவை  மனைவி கோகிலாம்பாளும்,அவரது கள்ளக்காதலனும் வீட்டு வேலைக்காரனுமான வேலுப்பிள்ளையும் வெட்டி படுகொலை செய்து,வீட்டு வளவில் எருக்குவிலுக்குள் புதைத்தது.யாழ்.நகர மண்டபத்தில் பருவகால உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எச்.டபிள்யூ.தம்பைய கியூ.சி.

முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.இரு எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.அ.அமிர்தலிங்கம் எதிரிகளுக்காக வாதிட்டார்.

அப்போது மேல் நீதிமன்ற முறை ஏற்படவில்லை.

1960 களில் இந்திய சேலை,பீடி இலை கள்ளக்கடத்தல்.இன்றுபோல கடற்படை முகாம்கள் இல்லை.பொலிசார்,இராணுவத்தினர் கைப்பற்றுவர். 

1965 சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ்.மேதின ஊர்வலம் மீது பொலிசார் தாக்குதல்.அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு.சாதிச்சண்டைகள்.1968 மாவிட்டபுரம் கந்தன் ஆலய தேர் எரிப்பு.1970 நியமன எம்.பியான எம்.சி சுப்பரமணியம் கார் மீது கைக்குண்டு வீச்சு.1970 கரவெட்டி, அச்சுவேலி,அல்வாய் பகுதிகளில் பௌத்த பாடசாலை ஆரம்பம்.1968 இல் மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் கடற்கரையில் நடந்து ரோந்து வந்த இரு இராணுவத்தினருக்கும் அங்குள்ள சில இளைஞர்களுக்கும்ஏற்பட்ட கைகலப்பு,ஒருவர் மரணம் போன்ற முக்கிய செய்திகள் 1960,1965,1970,1977 குடாநாட்டின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் தமிழ்த்தலைவர்களின் பேச்சுக்கள்.

பலாலியில் இருந்து விமான மூலமும்,தலைமன்னார்- தனுஸ்கோடி கப்பல் பயணத்திலும் இலங்கை பயணிகள் தம்முடன் வீரகேசரி பிரதிகளை எடுத்துச் சென்றனர்.தமிழகத்தில் உள்ளவர்கள் வீரகேசரியை விரும்பி படித்தனர். அன்று இணையத்தளங்கள் இல்லை.

1977 ஆகஸ்ட் 15 யாழ்.நகரில் இடம்பெற்ற வன்முறைகள், நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் அதனைவிசாரணை செய்ய ஜனாதிபதி ஜே்ஆர் நியமித்த நீதியரசர் எம்.சி.சன்சோனி ஆணைக்குழு.1981 யாழ்.நூலகம்,கூட்டணி அலுவலகம்,யோகேஸ்வரன் எம்.பி.வீடு எரிப்பு என பல செய்திகள் இலங்கையின் அரசியல் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த வீரகேசரி,தமிழர்கள் மத்தியில் தேசிய எழுச்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல்லாண்டு ஊடகப்பணி செய்ய வாழ்த்துகிறேன்.

ம.ரூபன்.
யாழ்.வாசகர்.