தென் கொரியா நாட்டில் இரண்டு  டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸில் டெல்டா வைரஸ் மரபணு மாற்றத்தால் உருவான டெல்டா பிளஸ் வைரஸ் தென்கொரியாவில்  இனங்காணப்பட்டது இதுவே  முதல் முறை என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் தொற்றாளர்களில் 40 வயதுடைய நபர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.

தென் கொரியா இதுவரை புதிய கொரோனா வைரஸின் நான்கு முக்கிய வகைகளில் 6,016 தொற்றாளர்களை உறுதி செய்துள்ளது. இதில் 2,983 பேர் டெல்டா வைரஸ் தொற்றாளர்களாவர்.

செவ்வாய்க்கிழமை அன்று தென் கொரியாவில் 39 சதவிகிதம் பேருக்கு முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 14.1% பேருக்கு  முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியா செப்டம்பர் மாதத்திற்குள் குறைந்தது 36 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.