(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
உலகில் பலமான நாடாகவுள்ள அமெரிக்காவில் கூட இரண்டு விதமான தடுப்பூசிகளையே வழங்க முடிந்துள்ள நிலையில் எம்மால் ஐந்து விதமான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதே அனைத்து நாடுகளுக்கும் இதிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரேவழியாகும். தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கமென்ற ரீதியில் எமது கடமையாகும். தடுப்பூசியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கத்திடம் நிதியில்லையென எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். என்றாலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் அந்த பொறுப்பை சிறப்பாக செய்தனர். ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில்கூட 71 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. தமது நாட்டில் சினோபார்ம், எஸ்ட்ரா செனிகா, ஸ்புட்னிக், மொடோர்னா, ஸ்பைசர் என ஐந்து விதமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகில் பலமான நாடாகவுள்ள அமெரிக்காவில்கூட இரண்டு தடுப்பூசிகள்தான் வழங்கப்படுகின்றனர். அதேபோன்று சினோவெட் என்ற தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கிறோம் என்றார்.