இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகிவரும் 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதனை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழ் திரை உலகில் கவனம் பெற்ற இயக்குனர்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் 'கருப்பு கண்ணாடி' புகழ் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பிசாசு 2'. 

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க நடிக்கிறார். 

இவர்களுடன் நடிகை பூர்ணா, நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

'பிசாசு' படத்தின் முதல் பாகத்தின் மூலம் பேயை வித்தியாசமாகக் காட்டி வெற்றி பெற்ற இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்று 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சிவப்பு வண்ண பின்னணியில் குளியல் தொட்டி ஒன்றில் பெண் ஒருத்தியின் இடது கையில் சிகரட்டும், அவளுடைய இரண்டு கால்களும் குளியல் தொட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டிருப்பதை போன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

சிலர்  'இது நடிகை ஆண்ட்ரியாவின் பாதங்கள்' என இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, 'பிசாசு 2 ' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.