பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடக்க இருந்த நான்காவது டி-20 போட்டிதான் கரீபிய மண்ணில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டுவைன் பிராவோ பங்கேற்ற இறுதி டி-20  போட்டியாக அமைந்தது.

எனினும் மழை காரணமாக கயானாவில் நேற்று நடக்க இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி-20 போட்டி இரத்து செய்யப்பட்டது.

இதனால் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தொடரை வென்றது.

சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெறவில்லை என்றாலும், கரிபிய மண்ணில் இனிமேல் சர்வதேச டி-20  போட்டியில் விளையாட மாட்டார். 

நவம்பரில் ஆரம்பமாகும் டி-20  உலகக் கிண்ண போட்டியுடன் டி-20  கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார்.

டெத் பவுலரான பிராவோ, செவ்வாயன்று கயானாவில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய (நேற்று) போட்டி சொந்த மண்ணில் தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று அறிவித்தார்.

கரீபிய மண்ணில் தனது கடைசி டி-20 போட்டி குறித்து போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் தனது சக அணி வீரர்களிடம் டுவைன் பிராவோ இதைப் பகிர்ந்துள்ளார். 

அதன்பின் இந்தத் தகவலை மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது.

மே.இ.தீவுகள் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

பிராவோ மே.இ.தீவுகள் அணிக்காக 85 டி-20 போட்டிகளி்ல விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ஓட்டங்களையும் குவித்துள்ளார். 

164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ஓட்டங்களையும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ஓட்டங்களையும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த டி-20 போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.