சுற்றுலா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்களாதேஷ் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேத்யூ வேட் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி-20 மஹ்மதுல்லா தல‍ைமையிலான பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

தொடரின் முதல் போட்டி செவ்வாயன்று இரவு டாக்காவில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய களத்தடுப்பை தேர்வு செய்ய, பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 அணி சார்பில் அதிகபடியாக ஷாகிப் அல் ஹசன் 36 ஓட்டங்களையும், மொஹமட் நைம் 30 ஓட்டங்களையும், அஃபிஃப் ஹொசைன் 23 ஓட்டங்களையும், மஹ்மதுல்லா 20 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

132 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மிட்செல் மார்ஷ் மாத்திரம் அதிகபடியாக 45 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் நசும் அஹமட் 19 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான், இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெய்டி ஹசான் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியில் 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க, இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.