ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை மாலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. 

காபூலின் மையப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் கார் வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தற்கொலை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அரசு கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளன.

வடமேற்கு காபூலில் உள்ள ஷாஹர்-இநாவில் உள்ள அன்சாரி சதுக்கத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக ஆரம்ப அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த குண்டுவெடிப்பு உயிர் இழப்புக்கு வழிவகுத்ததா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மூன்று தலிபான் தலைவர்கள், ஆப்கானிஸ்தானில் தங்கள் நிலைகள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதலடியாக தற்போதைய தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

நகரத்தின் அவசர சிகிச்சை மருத்துவமனை டுவிட்டர் பதிவில், இந்த தாக்குதலில் இதுவரை ஆறு நோயாளிகள் காயமடைந்திருப்பதை கூறியது. 

ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் அரசுப் படைகளுடன் தலிபான்கள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

லாங் வார் ஜர்னலின் மதிப்பீடுகளின்படி, ஆப்கானிஸ்தானில் 223 மாவட்டங்களை தலிபான் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசு 68 மாவட்டங்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி திங்களன்று, தனது நாட்டில் வன்முறை மோசமடைவதற்கு அமெரிக்க படைகள் திடீரென வெளியேறுகின்றமையே காரணம்  என்று குற்றம் சாட்டினார்.