(எம்.மனோசித்ரா)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் செவ்வாய்கிழமை (3) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

' சுதந்திர கல்வியை பாதிக்கும் , கல்வியை இராணுவமயப்படுத்தும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் உடன் நீக்கப்பட வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக பாராளுமன்ற சுற்று வட்டாரத்தை அடைந்தனர்.

வீதியின் இரு மருங்கிலும் பௌத்த பிக்குகள் செல்ல நடுவில் கறுப்பு நிறக் கொடியை ஏந்திய வண்ணம் சில மாணவர்கள் சென்றனர். 

இவ்வாறு பேரணியாக செல்லும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை ஒத்த முகமூடிகளை அணிந்தவாறு , ' சுதந்திர கல்வி ' என்று எழுதப்பட்ட சவப்பெட்டியையும் தூக்கிச் சென்றனர்.

பாராளுமன்ற சுற்று வட்டத்தை அடைந்து அங்கு நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் , பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் தடுக்கப்பட்டனர். 

எனினும் பொலிஸாரை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்டமையால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்தில் நீண்ட நேரம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதே வேளை , ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களை ஒத்த முகமூடிகளையும் இட்டு சவப்பெட்டியொன்றையும் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.