(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் எதிர்கட்சியின் உறுப்பினரா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமற்றது. ரிஷாத் தரப்பில் நால்வரில் மூவர் அரசாங்கத்தின் பக்கம் உள்ளார்கள். சிறுமி ஹிஷாலினியின்  மரணம் தொடர்பிலான உண்மை காரணி பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது இவ்விடயம். வைத்தியர் சாபி விவகாரத்தை போன்று இனவாத முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நகர்கிறது.

  இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் நாட்டு மக்கள் எவரும் நன்மையடையவில்லை. ஆனால் தற்போது திருடர்களும், குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே நாட்டு மக்கள் உண்மை காரணிகளை விளங்கிக் கொள்ள வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் விவகாரம் தற்போதைய  அரசியல்  மற்றும் சமூக மட்டத்தின் பிரதான பேசுபொருளாக உள்ளது. இச்சிறுமியின் மரணம் தொடர்பிலான உண்மை காரணிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் இச்சம்பவத்தை கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை அரசியல்வாதிகள் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுமி ஹிஷாலினியின்  விவகாரம் தற்போது குருநாகல் வைத்தியர் சாபியின் விவகாரத்தை போன்று இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நகர்கிறது.  வைத்தியர் சாபியின் விவகாரத்தை வைத்து கடந்த காலங்களில் வெறுக்கத்தக்க வகையில் இனவாதம் பரப்பி விடப்பட்டது. இறுதியில் அனைத்தும் பொய்யானது. இதே போல் இச்சிறுமியின் விவகாரத்தின் இறுதியும் நிறைவுப் பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.