(எம்.மனோசித்ரா)
பொது போக்குவரத்துக்களில் சுகாதார விதிமுறைகள் முறையாக பேணப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதால் , இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விரைவில் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பொது போக்குவரத்துக்களில் சுகாதார விதிமுறைகள் பேணப்படாமையால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக அறியக்கிடைத்தது. எனவே இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விரைவில் சுற்று நிரூபம் வெளியிடப்படும்.

அரச உத்தியோகத்தர்களில் பெருமளவானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இது நாட்டு மக்கள் அனைவருக்காகவும் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும். எவ்வாறிருப்பினும் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் நிலைமைகளை அவதானத்தில் கொண்டு உரிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அவற்றின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளின் போது ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.