'ஆதலினால் காதல் செய்வீர்' என்ற பெயரில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் வலைதள தொடர் ஒன்றின் டைட்டில் பாடலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார்.

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களின் தேடலுக்கு சரியான தீனியை தனியார் டிஜிட்டல் தளங்கள் வழங்கிவருகிறது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்கள் போல டிஜிட்டல் தளங்களிலும் தற்போது நாளாந்த வலைதள தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல்  'ஆதலினால் காதல் செய்வீர்' என்ற வலைதளத் தொடர் தனியார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகிறது.

இதன் டைட்டில் பாடலை ஜீ. வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். இதன் மூலம் வலைதளத் தொடர் ஒன்றுக்காக முதன் முதலில் டைட்டில் பாடல் ஒன்று இடம் பெறுவதும், அதனை ஜீ. வி. பிரகாஷ் குமார் பாடியிருப்பதும் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது.

இசை அமைப்பாளர் சந்தோஷ் இசையில் பாடலாசிரியர் நித்திஷ் எழுதியிருக்கும் 'ஹே நண்பா.. நேத்து காலை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே.. ஹே நண்பா.. கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..' எனத் தொடங்கும் பாடலை ஜீ. வி. பிரகாஷ் குமார் உற்சாகத் துள்ளலுடன் இளமை ததும்ப பின்னணி பாடியிருக்கிறார்.

' ஆதலினால் காதல் செய்வீர்' என்ற வலைதள தொடருக்கு வெ.கி அமிர்தராஜ் மற்றும் ஜோ. ஜோர்ஜ் ஆகியோர் திரைக்கதை எழுத, ராஜீவ் கே. பிரசாத் இயக்கியிருக்கிறார்.

120 அத்தியாயங்களாக வெளியாகும் இந்த தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நட்பு, காதல், பெண்களின் தனித்திறன், துரோகம் உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதுதொடர்பாக 'ஆதலினால் காதல் செய்வீர்' குழுவினர் பேசுகையில்,' இந்த வலைதள தொடரில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது.

குறிப்பாக 'ஹே நண்பா.' பாடலை பாடியதற்காக ஜீ. வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்படும் ஊதியத்தை அவர் முதுகலை மாணவி ஒருவரின் கல்விச் செலவுக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே எங்களது டிஜிட்டல் தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான 'நவம்பர் ஸ்டோரீஸ்' பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. 'ஆதலினால் காதல் செய்வீர்' என்ற வலைதள தொடருக்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.