(செ.தேன்மொழி)
பண்டாரகம மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் மற்றும் 91 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தலாவல பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் மற்றும் பெருந்தொகையான பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 100 கிராம் ஐஸ்ரக போதைப்பொருளும், 5 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், ஒரு கிராம் மென்டி ரக போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 90 இலட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் ஊடாகவே குறித்த பணத்தை சேகரித்து வைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சந்தேக நபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை 7 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, யாழ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , போதைப்பொருட்கள் மற்றும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 12 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.