வனவிலங்குகளால் இடம்பெறும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையில் திருத்தத்தை மேற்கொள்ளவும் இடம்பெறும் உயிரிழப்புக்கான இழப்பீட்டு தொகையை 10 இலட்சமாக ரூபாவாக அதிகரிப்தற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

01. காட்டு யானைகள் உள்ளிட்ட பாதுகாப்பு வனவிலங்குகளால் இடம்பெறும் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறையை திருத்தம் செய்தல்

பாதுகாப்பு வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் மற்றும் முழுமையான அல்லது பகுதியளவில் அங்கவீனமுறும் நபர்களுக்கும், வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்கும் தற்போது செலுத்தப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகைகளை கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • உயிரிழப்புக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 இலட்சம் ரூபா வரை அதிகரித்தல்.
  • முழுமையான அங்கவீனத்திற்கு ஆளாகும் நபரொருவருக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 இலட்ச ரூபா இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 இலட்ச ரூபா வரை அதிகரித்தல்.
  •  பகுதியளவில் அங்கவீனமுறும் அல்லது உடல் காயங்களுக்கு ஆளாகின்றவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 75 ஆயிரம் ரூபா இழப்பீட்டுத் தொகையை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரித்தல்.
  • காட்டு யானைகளின் தாக்குதல்களால் இடம்பெறும் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த ஒரு இலட்ச ரூபா இழப்பீட்டுத் தொகையை அதிகபட்ச 02 இரண்டு இலட்ச ரூபா வரை அதிகரித்தல்.