'96' பட புகழ் நடிகை கௌரி கிஷன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'உலகம்மை' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

'காதல் எஃப் எம்', 'குச்சி ஐஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய பிரகாஷ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'உலகம்மை'. 

இதில் கதையின் நாயகியாக '96', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகன் வெற்றி மித்திரன் நடிக்கிறார். 

இவர்களுடன் நடிகர்கள் மாரிமுத்து, ஜி எம் சுந்தர், பிரணவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்தி மாலா, அனிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

கே.வி. மணி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சரவணன் திரைக்கதை எழுத, குபேந்திரன் வசனம் எழுதி இருக்கிறார். 

எஸ்.வி.எம் புரொடக்சன்ஸ் சார்பில் வி. மகேஸ்வரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,

' 1970-ஆம் ஆண்டில் தமிழகத்தின் தென் பகுதியான திருநெல்வேலி மண்ணில் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மையமாகக் கொண்டு, எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி 'உலகம்மை' படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.' என்றார்.

நாவலை தழுவி 'உலகம்மை' திரைப்படமாக தயாராகி வருவதாலும், இதற்கு இசைஞானி இசை அமைக்க ஒப்புக் கொண்டிருப்பதாலும், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தொடக்கத்திலேயே உருவாகியிருக்கிறது.