'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையில், 'தல' அஜித் நடிப்பில் தயாராகியிருக்கும் 'வலிமை' படத்தின் முதல் பாடல் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வலிமை'. 

இப்படத்தில் 'தல' அஜித் கதையின் நாயகனாக பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி, யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

'வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு  ஒன்றரை ஆண்டு காலம் பொறுமையுடன் காத்திருந்த 'தல' அஜித்தின் இரசிகர்களுக்கு, அண்மையில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உற்சாகத்தை அளித்தது. 

'தல' அஜித்தின் இரசிகர்களும் அதனை இணையத்தில் வைரலாக்கி, ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர். தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. 

இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் 'நாங்க வேற மாறி...' எனத் தொடங்கும் முதல் பாடல், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று இரவு வெளியானது. 

'தல' அஜித்தின் இரசிகர்கள் இந்தப் பாடலை இணையத்தில் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். அதற்குள் இரண்டரை மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.