(எம்.மனோசித்ரா)

அதிபர்,  ஆசிரயர் தொழிற்சங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது , இவ்வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் தீர்வினை வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. 

சாதாரணதர செயன்முறைப் பரீட்சை செயற்பாடுகளிலிருந்தும் விலகியது ஆசிரியர் சங்கம்  | Virakesari.lk

இவ்வாறான பின்னணியில் கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களை பாடசாலைக்கு சமுகமளிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை தமது தொழிற்சங்க முடக்குவதற்கான சதித்திட்டமாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளல் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எம்மால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை 21 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.

ஜூலை 12 ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தலிலிருந்து விலகி எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்தோம்.

தற்போது பயிற்சிகளை வழங்குதல் , உயர்தரத்திற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்றல் , உயர்தர பரீட்சைக்கான செயற்பாடுகள் , பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்காக விண்ணப்பித்தல் , வலய மற்றும் மாகாண மட்டத்தில் இடம்பெறுகின்ற கல்வி அமைச்சின் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் நாம் விலகியுள்ளோம்.

இது தொடர்பில் கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது , இவ்வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து தீர்வினை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களை பாடசாலைகளுக்கு சமுகமளிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுற்று நிரூபமொன்றை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைக்கு செல்வதற்கான சூழல் உருவாக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் திடீரென எதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது ? இது அதிபர் , ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை முடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சதித்திட்டமாகும். கல்வி அமைச்சின் செயலாளருடைய இந்த செயற்திட்டம் வெட்கப்படக் கூடியது என்றார்.