(இராஜதுரை ஹஷான்)
போதைப்பொருள், பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனை நிறைவேற்ற வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறைவடையும். பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சட்டங்களை திருத்தியமைப்பது அவசியமாகும். என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சின் பாராளுமன்ற உறுப்பினர்  சாந்த பண்டார தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், போதைப்பொருள் கடத்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நீதிமன்றத்தினால் வழங்கப்படும் மரண தண்டனையை பெயரளவில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், செயலளவில் செயற்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டது.

 மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட விடயத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் சர்வசேத மற்றும் உள்ளக மட்டத்தில் எழுந்தன. காலப்போக்கில் இதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

 சமூகத்தின் மத்தியில் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள். மற்றும் பாலியல் துஸ்பிரயோக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த  வண்ணம் உள்ளது. இவ்வாறான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனையை செயற்படுத்த வேண்டும். தண்டனைகள் கடுமையானால் மாத்திரமே குற்றங்கள் குறைவடையும் என்றார்