(எம்.மனோசித்ரா)
நாட்டில் இன்று காலையுடன் 10 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய 10,076, 981 பேருக்கு ஏதேனுமொரு  தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 2,254,887 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 86 வீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதே போன்று 30 வயதுக்கு மேற்பட்டோரில் 20 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒட்டுமொத்தமாக 2.2 மில்லியன் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் 925,242 பேருக்கு முதற்கட்டமாகவும் 455,151 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் , சைனோபார்ம் தடுப்பூசிகள் 8,077,072 பேருக்கு முதற்கட்டமாகவும் 1,785,041 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் , ஸ்புட்னிக் தடுப்பூசிகள் 159,081 பேருக்கு முதற்கட்டமாகவும் 14,503 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் , பைசர் தடுப்பூசிகள் 201,495 பேருக்கு முதற்கட்டமாகவும் 192 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் , மொடர்னா தடுப்பூசிகள் 714,091 பேருக்கு முதற்கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 109 தடுப்பூசி நிலையங்களில் அஸ்ட்ராசெனிகா இரண்டாம் கட்ட தடுப்பூ வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாறு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.