குடந்தையான்

தமிழக அரசியல் களம், அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசலால் பரபரப்பாகி இருக்கிறது. அக்கட்சியின் ‘இரட்டை தலைமையான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகிய இருவரும் அண்மையில் புதுடெல்லிக்கு திடீரென்று பயணித்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கட்சி விவகாரங்கள் குறித்தும், கூட்டணி கட்சி என்ற முறையில் சில ஆலோசனைகளையும், சில வழிகாட்டல்கள் குறித்தும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறன. 

அ.தி.மு.க. பொதுவெளியில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலன்களுக்காகவே பிரதமரை சந்தித்து மனு அளித்தோம் என்று பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

ஆனால் அந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், ‘அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என சசிகலா வலியுறுத்தியிருக்கிறாரே?’ என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, எடப்பாடி பழனிச்சாமி, ‘நன்றி. வணக்கம்’ என்று கூறி அந்த வினாவிற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். 

ஆனால் அந்த கேள்வி தற்போது கட்சியின் அனைத்து நிலைகளிலும் பரவி இருக்கின்றது.

இதன் பின்னணியில் பாரதீய ஜனதா கட்சி, சசிகலா, தி.மு.க., எடப்பாடி உள்ளிட்ட பலரின் அரசியல் வியூகங்கள் சுழன்றுகொண்டிருப்பதாக விடயமறிந்தவர்கள் விவரிக்கிறார்கள்.

அண்மையில் தமிழகத்தின் முன்னணி காட்சி ஊடகம் ஒன்றில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த சசிகலாவின் நேர்காணல் ஒளிபரப்பானது. 

அவர், ‘அரசியலை விட்டே விலகுகிறேன்’ என்று ஏற்கனவே அறிவித்தவர். அவ்வாறானவர் அரசியல் பேசுகின்றாரே என்ற கேள்விகள் மக்களின் மனதில் எழுந்தன.

அவ்வாறிருக்க, குறித்த நேர்காணலில் சசிகலா பற்றிய பாரியதொரு பிம்பம் கட்டமைக்கப்படுவதற்குரிய வினாக்கள் மட்டுமேஇடம்பெற்றிருந்தன. 

அவ்விதமான வினாக்கள் எழுப்பட்டமையானது ஊடக அறமல்ல என்ற விமர்சனங்கள் வெகுவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அவ்வாறிருக்கையில்,  அ.தி.மு.க.வின் மூத்த தொண்டர்களோ, கட்சியை தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் கட்சியை தொடர்ந்து வழிநடத்தி, மேம்படுத்திய புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. இயங்கியது போல் ஒற்றைத்தலைமையுடன் இயங்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.  

ஆனால் அ.தி.மு.க.வில் உள்ள நடுநிலையான மூத்த நிர்வாகிகளோ,

 “சசிகலாவை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்த்துக் கொள்வதால் எந்த பலனும் இல்லை. ஏனெனில் அவருக்கென தனியாக எந்த ஒரு அரசியல் தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியாக இருந்ததால் மட்டுமே அவரது அரசியல் அனுபவம். 

அந்த காலகட்டத்திலும் அவர் தொடர்ந்து வருவாய் ஈட்டுவதில்தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரே தவிர, அதனை கடந்து அரசியல் ரீதியாக எந்த ஒரு கொள்கையையோ அணுகுமுறையோ அவர் கடைப்பிடிக்கவில்லை; சொல்லவுமில்லை;

 

அதே தருணத்தில் ஜெயலலிதாவுடனான நெருக்கத்தின் காரணமாக மற்றவர்களை அடிமைப்படுத்தி, அதில் ஆதாயம் அடைந்தாரே தவிர, மற்றவரை அரசியல் ரீதியாக வளர்ச்சி அடைய வைத்ததில்லை. 

தற்போதைய சூழலில் பாஜகவின் நெருக்கடி ஒருபுறம், அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் ஒருபுறம், தி.மு.க.வின் வெளிப்படையான எதிர்ப்பு போன்ற மும்முனைத் தாக்குதலில், அ.தி.மு.க. எம்மாதிரியான அரசியல் நிலைப்பாட்டை தொடரவேண்டும் என்பது குறித்த தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் சசிகலாவிடம் சிறிதும் இல்லை. 

அதே நேரத்தில் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு அரசியல் உத்தியை சசிகலாவிடமிருந்து சிறிதும் எதிர்பார்க்க இயலாது. 

அதனால் சசிகலாவால் அ.தி.மு.க.விற்கு எந்த நன்மையும் இல்லை. எனவே அவரை கட்சியில் சேர்த்துக் கொள்வது வீண்" என்கிறார்கள். 

இதனை வழிமொழியும் வகையில்தான் புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எடப்பாடியார் பதிலளிக்க மறுத்தார் என்று  அவரது ஆதரவாளர்கள் விளக்கமளிக்கிறார்கள். 

அதே தருணத்தில் சசிகலாவை பற்றி தமிழக ஊடக சந்திப்புகளில் பேசும் எடப்பாடியார், ‘அவரை கட்சிக்குள் சேர்க்க மாட்டோம்’ என்று தெளிவாகவும், திட்டவட்டமாகவும், உறுதியாகவும் சொல்லிவந்தவர் ஏன் அமைதி காத்தார் என்ற கேள்வியும் உள்ளது.

உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டிய நெருக்கடி, சசிகலா தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்று உறுதியாக தெரியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்று பல்வேறு அரசியல் ரீதியான சிக்கல்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளதால் எடப்பாடியார் தற்போது மௌனமாக பதிலளிக்க மறுத்து வருகிறார் என்பதே யதார்த்தமாகவுள்ளது.

அத்துடன் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காக “ஆள் பிடி அரசியல்“ உத்தியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், அ.தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தன்னுடைய இடையறாத கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலும் எடப்பாடிக்கு  உருவாகியிருக்கிறது. 

தி.மு.க. ஒருபுறம், சசிகலா ஒருபுறம், பா.ஜ.க. ஒரு புறம், பன்னீர்செல்வம் ஒருபுறம் என்று நாலா புறத்திலிருந்தும் எடப்பாடி மீது அழுத்தங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. 

இதிலிருந்து தப்பித்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை முதல்வர் பதவியில் நீடிக்க வைத்த பிரதமரின் ‘மறைமுக’ ஆதரவு மேலும் தொடர வேண்டும் என்பதற்காக அவரை சந்தித்திருக்கிறார் என்ற பார்வையும் உள்ளது. 

ஆனால் கட்சிக்குள் ‘ஒற்றை தலைமை’யை நோக்கி கடினமான சூழலில் சிறிது சிறிதாக எடப்பாடி காய் நகர்த்தி வருவதை கண்டு எதுவும் செய்ய இயலாமல் தவித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். 

தன்னுடைய மகனுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவியை எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்து விட்டதால் அவர்கள் மீது கோபம் கொண்டிருக்கும் பன்னீர்செல்வம், வேறு வழியில்லாமல் சசிகலாவின் லாவணி அரசியலுக்கு உடன்பட தொடங்கியிருக்கிறார். 

கட்சிக்குள் தன்னை வலுப்படுத்திக்கொள்ள இயலாமலும், எடப்பாடியை வலிமையாக எதிர்க்கவும் முடியாமலும் திணறி வரும் பன்னீர்செல்வம், பா.ஜ.க.வின் ஆதரவான நிலைப்பாட்டை மட்டுமே தற்போது உறுதியாக நம்பி இருக்கிறார். 

இதேதருணத்தில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் சிறிய அளவிலான நிர்வாகிகளிடத்தில் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியில் சசிகலா தீவிரம் காட்டி வருகிறார்.

சசிகலாவின் இந்த முயற்சிக்குப் பின்னால் பா.ஜ.க.வின் ஆசீர்வாதம் இருப்பதாக எடப்பாடியும், பன்னீர்செல்வமும் கருதுகின்றார்கள்.

அதேதருணத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சர்கள் மீது ஆளும் தி.மு.க. அரசின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, அதனை எப்படி எதிர்கொள்வது என்பதில் தற்போதைய ‘இரட்டை தலைமை’க்குள் குழப்பம் நீடித்து வருகிறது என்பது அண்மையில் வருமான வரி சோதனைக்குள்ளான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் பட்டவர்த்தனமாக தெரிய வந்துள்ளது. 

பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி என்ற இந்த மூவரில் தங்களுடைய உத்தரவுக்கு யார் கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படுவார்கள் என்பதை மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மேலிடத்திற்கு நன்கு தெரியும். 

இதனால் அவர்கள் இந்த மூவருக்குள் மறைமுக பனிப்போரை ஊக்கப்படுத்தி, அ.தி.மு.க. என்ற தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சியை அனைத்து நிலைகளிலும் பலவீனப்படுத்தி, இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அ.தி.மு.க. எதிர் தி.மு.க.’என்ற நிலைப்பாட்டை மாற்றி ‘தி.மு.க. எதிர் பா.ஜ.க.’ என்றவாறு தமிழகத்தை கொண்டுவரவே முயற்சிக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு அரசியல் சதுரங்கத்திற்குள் வெட்டப்படப்போவது யார் என்பதும் அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையை ஏற்கப்போவதும் யார் என்பதே தற்போதுள்ள கேள்வியாகின்றது.