புத்தளம் - அநுராதபுரம் வீதியின் சிரம்பிஹடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிய பயணித்த கார் ஒன்றும் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிய பயணித்த லொரி ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் முன்னால் வந்த லொரியுடன் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இருவரும் நேற்று இரவு உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில், காரின் சாரதியான புத்தளம் - மன்னார் வீதியின் 2ஆவது கணுவை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய தினேஷ் சதுரங்க மற்றும் புத்தளம் - நில்ஹடிய ரத்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சதிஷ் மதுஷான் ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதி கம்பஹா உடுதுத்திரிபிடிய பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.

தற்போது சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.