இயக்குனரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா நடிப்பில் தயாராகிவரும் 'கடமையை செய்' படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குனரும், நடிகருமான சுந்தர். சி கதையின் நாயகனாக நடித்த 'முத்துன கத்திரிக்கா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வேங்கட்ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடமையை செய்'.

இதில் கதையின் நாயகனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக 'டிஜிட்டல் தலைமுறை ரசிகர்களின் கவர்ச்சி கட்டழகி' யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், மோகன் வைத்யா, சேசு, டி எஸ் ஆர், ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி, அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, 'தடம்' படப் புகழ் இசை அமைப்பாளர் அருண் ராஜ் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில் 'மான்ஸ்டர்' படத்திற்கு பிறகு ஏராளமான குடும்ப ரசிகர்களை சம்பாதித்திருக்கும் இயக்குனர், நடிகர் எஸ் ஜே சூர்யா யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலான கொமர்ஷல் அம்சங்கள் இப்படத்தில் உள்ளன. 

கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.  தயாரிப்பாளர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தனர். மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று, அண்மையில் நிறைவடைந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்படும். இந்நிலையில் படத்தில் நடித்த நாயகி யாஷிகா ஆனந்த் அண்மையில் விபத்தில் சிக்கினார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர் மீண்டும் குணமடைந்து நலமுடன் திரும்ப வேண்டுமென படக்குழுவினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.' என்றார்.

எஸ் ஜே சூர்யா, யாஷிகா என்ற கவர்ச்சி கூட்டணி, கொமர்ஷலாக இணைந்திருப்பதால் இவர்கள் இருவரும் திரையில் செய்திருக்கும் கடமையைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.