கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, உலகளாவிய ரீதியில் மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி, இலங்கை சாதனையை படைத்துள்ளதாகவே அவர் பாராட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் கொரோனாவிற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை 5,15, 830 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்த மைல்கல்லை எட்டிய சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்திற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, தொடர்ந்து பொதுமக்களும், அரசாங்கமும் கொரோனா குறித்த  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோனாவிற்கெதிராக போராட வேண்டுமெனவும், அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கையில், கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் விபரங்களை சேகரித்துகப்பார்க்கையில், கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.

இலங்கையில் இதுவரையில், 10,076,981 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், மொத்த சனத்தொகையில், 30 வயதிற்கு மேற்பட்டோரில், 86% இற்கும் அதிகமானோர், குறைந்த பட்சம், முதலாம் கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், 30 வயதிற்கு மேற்பட்டோரில், 20% மானோர், 2ஆம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுள்ளதாகவும் சேகரிக்கப்பட்ட தரவுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அதாவது இலங்கையில் சுமார், 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.