கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் வேன் ஒன்றின் டயர் வெடித்ததில் வேகக் கட்டுப்பாட்டை மீறி இரு மோட்டர் சைக்கிள்களுடன்  மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சம்சுதீன் சஹாப்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் சம்பவதினமான நேற்று இரவு 8 மணியளவில் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று பகுதியில் நோக்கி பிரதான வீதியில் பயணித்த டொல்பீன் ரக வேன் ஒன்று அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து வேனின் டயர் ஒன்று வெடித்ததையடுத்து வேன் வேககட்டுப்பாட்டை மீறி எதிரே அக்கரைப்பற்றில் இருந்து நிந்தவூருக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் பயணித்த மோட்டர்சைக்கிளுடனும் இன்னொரு மோட்டர்சைக்கிளுமா இரு  மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உயிரிழந்ததுடன் மகன் உட்பட 3 பேர் படுகாயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வேனை செலுத்திய சாரதி கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது  தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.