(செ.தேன்மொழி)
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாண பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் எரிபொருட்களை கொள்ளையிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாண பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் எரிபொருட்கள் கொள்ளையிடப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரவ புகையிரத நிலையத்திற்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பாரவூர்தி சாரதிகள்  ஐவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில் நிர்மாண பணிகளுக்காக பொருட்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்த்திகளிலிருந்து சந்தேக நபர்கள் நீண்டகாலமாக எரிபொருட்களை கொள்ளையிட்டுள்ளதுடன் , அவற்றை எண்ணெய் சேகரிக்கும் தாங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாராவூர்தி சாரதிகள் ஐவரும் , எண்ணெய் தாங்கிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் டிரக்ட்டர் வாகனத்தின், சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து  சிறியரக லொறிகள் ஐந்தும், டிரக்ட்டர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வேயங்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேற்படி விவகாரம் தொடர்பில் வேயங்கொட பொலிஸாரிடம் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.