(ஆர்.ராம்)

தற்போதைய நிலைமையில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டுப் படைகளுக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதை விட வேறு வழிகள் இருக்கவில்லை. 

இந்த வெளியேற்றத்தினை அடுத்து மிகவும் மோசமானதொரு தரப்பு மூலோபாய பகுதியான ஆப்கானிஸ்தானில் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதை தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலிபான்கள், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய தரப்புக்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும், ஆப்கானிஸ்தான் விடயத்தில் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கான ஏதுநிலைகள் ஏற்பட்டுள்ளன. 

இது, தனியே இஸ்லாமிய மேலாதிக்க மூலோபாயத்திலிருந்து ஏற்பட்டது என்று வரையறை செய்வதை விடவும், இந்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட ஒற்றுமைப்பாடு என்று வரையறை செய்யலாம். 

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தினை அடைவதை நோக்கி வேகமாக நகரும் தலிபான்கள் பற்ற வைக்கும் தீப்பிளம்புகளும், அதன் வெப்பமும் அந்நாட்டின் தென்கிழக்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டத்தினையும், வடமேற்கில் மத்திய ஆசியாவையும், மத்திய கிழக்கினையும், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தினையும் நிச்சயமாக தாக்கியே தீரும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

ஆகவே ஆப்கானை சுற்றியுள்ள நாடுகள், அதிகாரவர்க்கத்தின் சதுரங்க விளையாட்டுக்கான சிப்பாயாக அந்நாட்டை மாற்றாது, அந்நாட்டில் பிராந்திய, பூகோள அமைதி ஏற்படவும், ஜனநாயகத் தன்மையான ஸ்திரத்தன்மையான ஆட்சி அமைவதற்கும் துணையாக செயற்படுவதற்காவே உறுதி பூண்டு செயற்படவேண்டும். 

ஆப்கானைப் பயன்படுத்தி சீனா முன்னெடுக்கும் மூலோபய நகர்வானது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது. ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக தங்கியிருந்து இரத்தக்களரியில் கற்றுக்கொண்ட பாடங்களை சீனா தனது அடியை முன்வைப்பதற்கு முன்னதாக முன்னதாரணமாகக் கொண்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகின்றது. 

அமெரிக்க உள்ளிட்ட கூட்டு நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தினசரி குண்டுவெடிப்புக்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான உக்கிரமான நிலைமையானது அச்சமூட்டுவதாக மாறியுள்ளது.

 

ஏற்கனவே மூன்றிலொரு பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தலிபான்கள் தற்போது தலைநகர் காபூலை நோக்கி விரைவாக நகர ஆரம்பித்துள்ளார்கள். 

தலிபான்களின் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதிருக்கும் ஆப்கானிஸ்தானின் அரச படைகள் தந்திரோபயமாக பின்வாங்கல்களைச் செய்து வருகின்றது. 

அத்துடன் தமக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் இல்லாமையினால் அரச படைகள் செய்வதறியாது உள்ளன. 

தற்போது அமெரிக்க கூட்டுப்படைகளுடன் வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்வது குறித்த பேச்சுகளை முன்னெடுப்பதற்கு அவை முனைப்புக்காட்டி வருகின்றன. 

80ஆயிரத்திற்கும் அதிகமான அங்கத்தவர்களைக் கொண்ட தலிபான்களை கட்டுப்படுத்துவதற்கு முடியாது ஆப்கான் அரசபடைகள் திணறிக்கொண்டிருக்கையில், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு ஒத்துழைப்புக்களை, ஆதரவுகளை வழங்கினார்கள் என்ற அடிப்படையில் ஆப்கான் மலைத்தொடர் பகுதிகளில் செயற்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்கள் தமது வேட்டைகளை ஆரம்பித்துள்ளன. 

அவை ஆங்காங்கே குண்டுவெடிப்புக்களைச் செய்து வருவதோடு, தாம் குற்றவாளிகளாக அடையாளம் காண்பவர்களுக்கு அதிகபட்சமாக 'மரண தண்டனையை' அளித்து வருகின்றன. இந்த நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகின்றன. 

இந்த நிலைமையால், தன்னார்வ ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் செயற்பட முடியாதவொரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், நாளாந்தம் நிகழ்ந்து வரும் கோரமான சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளிவராது அமிழ்ந்து போகின்றன. 

ஆப்கானிஸ்தானில் தற்போது, தலிபான்கள், ஹகானி நெட்வொர்க், அல்-கொய்தா, இஸ்லாமிய ஸ்டேட்-கோராசன் மாகாணம், ஐ.எஸ் மற்றும் டனேஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயற்படுகின்றன. 

இவை பாகிஸ்தானின் புலனாய்வு ஸ்தாபனத்தின் கீழ் செயற்படுவதாகவும் சந்தேகங்கள் உள்ளன. 

இவ்வாறிருக்க, குவெட்டாவை அடிப்படையாகக் கொண்டதாகவே தலிபான்களின் பெரும்பாலான தலைமைகள் தற்போதும் செயற்பட்டு வருகின்றன.

ஆப்கானில் தலிபான் இயக்கத்தினை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா அப்துல் ஹனி பரடர் மற்றும் பிற தலிபான் தலைவர்கள் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆப்கானிற்குள் நுழைந்தபோது பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். 

அதன் பின்னர், அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களால் அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். எனினும், 2018இல் டோஹாவில் நடைபெற்ற அமெரிக்காவின் நிதியுதவி அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே விடுக்கப்பட்டிருந்தனர். 

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதன் மூலோபாயத்திற்கு மிகவும் முக்கியமான பகுதியாக கருதுவது காஷ்மீராகும். 

இதன் காரணத்தினாலேயே பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் தனது பிரதிநிதிகளாக பல்வேறு அடிப்படைவாதக் குழுக்களை உருவாக்கி செயற்பட வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இந்திய எதிர்ப்பு மனோநிலையில் உருவாக்கப்பட்டுள்ளவையாக உள்ளன.

 

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் போன்ற அமைப்புக்கள் காஷ்மீரில் செயற்படுகின்றன. இந்தக் குழுக்கள் செயற்பாட்டு ரீதியாக பலமான நிலையில் உள்ள பயங்கரவாதக் குழுக்களான தலிபான், அல்-கொய்தா, ஐ.எஸ், ஐ.எஸ்.கே.பி உள்ளிட்ட அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. 

இந்த தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்கு உதாரணமாக கூறுவதாயின், கடந்த ஆண்டு மார்ச் மாதம் காபூலின் குரு ஹர் ராய் சாஹிப் குருத்வாரா மீதான தாக்குதலின் பிரதான மூளையாக ஐ.எஸ்.கே.பி.யின் தலைவர் அஸ்லம் பாரூக்கி என்பவரே செயற்பட்டிருந்தார் என்பது ஒருவிடயமாகிறது. 

அதுமட்டுமல்ல, அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகியவை காஷ்மீரில் மட்டுமல்ல, சிரியாவில் முன்னெடுக்கும் ஆயுத நடவடிக்கைகளுக்கான இந்திய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்துவருகின்றமையையும் விசேடமாக கூற முடியும்.

அத்துடன் இந்திய முஜாஹிதீன் அமைப்பானது இந்திய துணைக்கண்டத்தில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்மையையிட்டு பெருமை கொள்வதாகவும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளமையையும் மற்றொரு உதாரணமாக குறிப்பிட்டுக் கூறமுடியும். 

இவ்வாறிருக்கையில், 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் ஆக்கிரமிப்புச் செய்தன. 

இந்தச் சந்தர்ப்பத்தில் சோவியத் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதற்காக அமெரிக்கா திரைமறைவில் இருந்து பாகிஸ்தான் ஊடாக பல நகர்வுகளை முன்னெடுத்திருந்தது. 

குறிப்பாக கூறுவதானால், பாகிஸ்தானில் தோன்றியிருந்த பல மதரஜாக்களில் பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்து இளம் ஆப்கானிஸ்தானியர்களிடையே ஜிஹாதி சித்தாந்தத்தினை புகுத்தியது. 

பின்னர் கம்யூனிஸ்ட்டுக்களான சோவியத் படைகளிடமிருந்து ஆப்கானை விடுவிப்பதற்காக அந்த இளைஞர்களை முஜாஹிதீன்களாக போராடுவதற்கு ஊக்குவித்திருந்தது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட முஜாஹிதீனிலிருந்து, தலிபான்கள் ஒரு தனித்துவமான போர்வீரர்களாகவும், ஜிஹாத்தில் ஈடுபட்டுள்ள அரபு போராளிகளை உள்ளடக்கிய குழுவாக அல்-கொய்தாவும் உருவெடுத்தனர். 

பாகிஸ்தானின் இராணுவ அமைப்பு இந்தக் குழுக்களின் உருவாக்கத்திற்கு குடையாக செயற்பட்டது.

இவ்வாறு வரலாறு இருக்கையில், பாகிஸ்தானில் மதிப்பிடப்பட்ட 36 ஆயிரம் மதரஸாக்கள், வெறுப்பு நிறைந்த இளைஞர்களை உருவாக்குகின்றன. 

அந்த மதரஸாக்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கிலிருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தியே செயற்படுகின்றன. 

அதுமட்டுமன்றி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுடைய தரப்புக்களும் ஒரு மூலோபாயமாக அந்த மதரஸாக்களுக்கு நிதி அளிக்கின்றன.

இந்நிலையில், சீனா பாகிஸ்தானை தனது கனவுத்திட்டமான மண்டலம் மற்றும் பதை முன்முயற்சியில் உள்ளீர்த்துள்ளது. 

அத்துடன், பாகிஸ்தான் - சீனா பொருளாதார தாழ்வாரத் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்த திட்டமானது ஹரகோரம் நெடுஞ்சாலை மூலம் பாகிஸ்தான் வழியாக அரேபிய கடலுடன் தொடர்புபடுத்துமொரு மூலோபாய வழியை பீஜிங்கிற்க வழங்குகிறது. 

அமெரிக்கா தலைமையிலான கூட்டு நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக திரும்பப் பெறப்பட்டதன் பின்னர் சீனா அங்கு உறுதியாக கால் பதித்தால், பாகிஸ்தானுக்கு சமாந்தரமாக மற்றுமொரு மூலோபய செயற்றிட்டத்தினை அது முன்னெடுக்கும் என்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. 

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள  கில்கிட்-பால்டிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் வாக்ஜீர் பாஸ் வழியாக பாகிஸ்தானுக்கு சமாந்தரமாக மற்றுமொரு பாதையை சீனாவினால் அமைத்துக்கொள்வதற்கு முடியுமானதாக இருக்கும். 

இதனைவிடவும் இப்பகுதி உலகின் மிகப்பெரிய கையாளப்படாத செப்பு வளத்தைக் கொண்டதொன்றாகவும் உள்ளது. 

சீனா ஏற்கனவே சீன மெட்டாலர்ஜிக்கல் குழுமத்தின் மூலம் 3.5 பில்லியன் டொலர்கள் முதலிட்டு செப்புச் சுரங்கத்தினை குத்தகைக்கு எடுத்துள்ளது. 

சீனாவின் இந்த தொகையானது ஆப்கானிஸ்தானில் முதலிடப்பட்ட அதியுச்ச அந்நிய முதலீடாக தற்போதுள்ளது. 

இதனைவிடவும், பீஜிங் அங்குள்ள ஏனைய சுரங்க வளங்கள், மற்றும் நிலங்களின் ஏகபோக உரிமைகளை பெறுவதில் அதிகளவு ஈடுபாட்டைக் காண்பிக்கின்றன. 

தலிபான்கள் ஆப்கானின் அதிகாரத்தில் அமருக்கின்றபோது பீஜிங் தனது விருப்புக்களை பூர்த்தி செய்யக்கூடிய நகர்வுகளை நிச்சயமாக முன்னெடுக்கும். அதாவது சுதந்திரமாக முதலீடுகளை தேவையான அளவில் மேற்கொள்ளும். 

அதற்கு பிரதியுபகாரமாக, பாதுகாப்பு ஆயுதங்கள், ராடர்கள், கண்காணிப்பு கருவிகள், செயற்கைகோள் வசதிகள், தொடர்பாடற்கருவிகள், உள்ளிட்ட நவீன தளவாடங்களை தலிபான்களுக்கு சீனா வழங்குவதற்கு பின்நிற்காது. அத்துடன் நிதியளிப்பிலும் குறைவைக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதுமட்டுமன்றி எஸ்.சி.ஓ, சீனா-மத்திய ஆசியா ஒத்துழைப்பு மற்றும் சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் முத்தரப்பு ஒத்துழைப்பு பொறிமுறை உட்பட பலதரப்பு கட்டமைப்புகளுக்குள் ஆப்கானிஸ்தான் சமாதான செயல்முறையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை சீனா தற்போது நடைமுறைப்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில் இஸ்லாமிய மரபுவழி தீவிர முத்திரயைக் கொண்டிருக்கும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கின்றார். 

தற்போது அவர் ஆப்கானிஸ்தானில் 'அமைதிக்காப்பாளர்' என்ற பாத்திரத்துடன் களமிறங்குவதற்கு ஆர்வமாக உள்ளார். 

ஏற்கனவே பாலஸ்தீன் மற்றும் லெபனான் நாடுகளைத் தவிர, அரேபிய நாடுகளுடன் இடைவெளியைக் கொண்டிருக்கும் இவர் தற்போது தெற்காசியவில் காலடி பதிக்க முயற்சிக்கின்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகவே உள்ளது. 

நாகோர்னோ-கராபாக் மோதலில் ஆர்மீனியாவிற்கு எதிராக எர்டோகனின் அரசாங்கம் இராணுவ ரீதியாக அஜர்பைஜானுக்கு உதவிகளை வழங்கி ஆதரித்தது, அவ்வாறான நிலையில் தற்போது ஏர்டோகனின் தெற்காசியா நோக்கிய நகர்வினால் உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் போன்ற அமைப்புகள் பலமடையலாம். 

அவ்விதமான நிலைமைகள் ஏற்படுகின்றபோது ஏற்கனவே மத்திய ஆசியா நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்திய உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அதுசார்ந்த ஆயுத அமைப்புக்கள் மீண்டும்  ஸ்திரத்தன்மைகளை கேள்விக்குட்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

அதேநேரம், ஏர்டோகனின் முன்னாள் இராணுவத்தலைமையின் உதவியாளர் அட்னான் தன்ரெவர்டி தலைமையில் லிபியா, சிரியா ஆகிய நாடுகளில்  இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளன. 

இந்தக் குழுக்களுக்கும் பொபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற ஜிஹாதி குழுக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

அதேநேரம், ஈரான், ஆப்கானிஸ்தானின் மிக அண்மித்த அயல் நாடாக இருப்பதால், நாட்டின் சில பகுதிகளில் செயல்படும் தலிபான் மற்றும் ஷியா இஸ்லாமியர்களுக்கு அதன் இராணுவ, தந்திரோபாய மற்றும் நிதி ஆதரவுகள் தாராளவாதமாக உள்ளன. 

கடந்த சில ஆண்டுகளாக, ஈரான், இந்தியா மீது தனது பார்வையை கொண்டுள்ளதாகவும் கார்கில் ஷியா சிறுபான்மையினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் ஷியா குழுவினர்கள் ஆகியோரை தீவிரமயமாக்குவதில் ஈடுபட்டுள்ளது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதன் பின்னர் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பெரும்பாலான பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றார்கள். 

அமெரிக்கா சிந்தனைக் குழுவால் வெளியிடப்பட்ட 'நஷனல் இன்ட்ரஸ்ட்' என்ற இதழில் கட்டுரையொன்றை வரைந்துள்ள அபிநவ் பாண்டியாவின் கருத்துப்படி, பாகிஸ்தான் பல போர்க்குணமிக்க மற்றும் தீவிரவாத தலிபான் போராளிகளை காஷ்மீருக்கு திருப்பி விடலாம் என்று இந்திய பாதுகாப்புப் படைகள் அச்சம் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றார்.

அத்துடன், காஷ்மீரில் 1990 களில் ஒரு செயலிழந்த பயங்கரவாத அமைப்பான அல்-பத்ரை பாகிஸ்தான் புதுப்பித்து வருகிறது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் அல்-பத்ருக்கு வலுவான தளம் உள்ளது. 

அத்துடன் தலிபான்களுக்கு ஹகானி நெட்வேர்க்குடன் தொடர்புகள் உள்ளன என்றும் அவரது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள்- பாகிஸ்தான்-சீன-துருக்கி-ஈரான் ஆகியவற்றின் கூட்டுறவு உறவு தெற்காசியா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமைதியற்ற நிலையைத் தூண்டுவதைத் தவிர உலக அமைதிக்காக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

(இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்திற்கான குறிப்புக்கள் சில ஏசியன் அபெர்ஸ் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டவை)