(எம்.மனோசித்ரா)
அதிபர் , ஆசிரியர்களின் போராட்டத்தை உயிர் அச்சுறுத்தல் விடுப்பதன் ஊடாக முடக்கி விட முடியாது. எம்மை சிறைகளில் அடைத்தாலும் போராட்டங்களை கைவிடுவதற்கு நாம் தயாராக இல்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , சுமார் 20 நாட்களுக்கும் அதிகமாக அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது. பிரதேச  மட்டத்தில், நாடளாவிய ரீதியில் எமது தொழிற்சங்களினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் போது  எனக்கு எதிராகவும் ஜோப் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராகவும் போலியான பிரசாங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. என்னுடைய மனைவிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது போலியான தகவலாகும்.

அது மாத்திரமின்றி பொலிஸார் ஊடாக நாம் வசிக்கும் இடங்கள் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்தால் சேகரிக்கப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளிலுள்ளவர்கள் ஊடாக தொலைபேசி அழைப்புக்கள் மூலம் எமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

கடந்த 28 ஆம் திகதி மாலை 5.25 க்கு எனக்கு கொரியாவிலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. என்னை கடுமையாக எச்சரித்தது மாத்திரமின்றி வீதியில் நாயைப் போன்று கொன்று போடுவதாகவும் இதன் போது அச்சுறுத்தப்பட்டது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் எமது போராட்டங்களை முடக்க முடியாது என்றார்.