(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்று பரவல் அபாயத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் அமைந்துள்ளன. சரியான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்காமல் ட்ரம்பினுடைய கொள்கையை பின்பற்ற முற்பட்டால் நாடு மீண்டும் பாரதூரமான நிலைமையை அடையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்தார்.

இறப்பவர்கள் இறக்கட்டும். தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடியவர்கள் வாழட்டும் என்ற ரீதியில் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த பிழையான தீர்மானமே அமெரிக்கா பாரிய அழிவுக்குச் செல்ல வழிவகுத்தது. தற்போது எமது அரசாங்கமும் அவ்வாறானதொரு கொள்கை ரீதியான தீர்மானத்தையே எடுத்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

மேலும் கூறுகையில், டெல்டா உள்ளிட்ட பல்வேறு வைரஸ் திரிபுகள் பரவ ஆரம்பித்துள்ளமையால் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மாத்திரமின்றி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசாங்கம் அதற்கு முரணாக சகல அரச உத்தியோகத்தர்களையும் சேவைக்கு அழைத்துள்ளது. இதனால் கொழும்பிற்கு பெருமளவானோர் வரக்கூடும். அத்தோடு பொது போக்குவரத்துக்களும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைப் பின்பற்றாமல் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிவரக் கூடும்.

இதனால் நாடு மீண்டும் பாரதூரமான நிலைக்குச் செல்லும். நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதா அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.