செ.தேன்மொழி

விமானப்படையின் 70 ஆவது வருடபூர்த்தியை முன்னிட்டு கெபித்திகொல்லாவ - கணுகஹவெவ கிராமத்தின் மறுசீரமைப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்ட விமானப்படையினர் , அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முடிவுறச் செய்து மக்களிடம் கையளித்துள்ளதாக விமானப்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

கிராமத்துடனான உரையாடல் வேலைத்திட்டத்திற்கமைய , ஜனாதிபதி கெப்பத்திகொல்லாவ - கணுகஹவௌ பகுதிவாழ் மக்களை சந்தித்திருந்த போது , மக்கள் தங்களது கிராமத்தை மறுசீறமைத்து கொடுக்குமாறு வேண்டுகோள்  விடுத்திருந்தனர்.இந்நிலையில் விமானப்படையின் 70 ஆவது வருடபூர்த்தியை முன்னிட்டு கிராமத்தின் மறுசீரமைப்பு பணிகளை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷண பதிரண பொறுப்பேற்றிருந்தார்.

இந்த கிராமத்தில் சுமார் 314 குடும்பங்கள் வசித்து வருவதுடன் , கிராமத்தின் மறுசீறமைப்பு பணிகள் விமானப்படை தளபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றிருந்தது. அதற்கமைய , முதற்கட்ட மறுசீரமைப்பு  பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முடிவுற்றிருந்த நிலையில் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட மறுசீரமைப்பு  நடவடிக்கைகளும் தற்போது முடிவடைந்துள்ளன. இதன்போது கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலைக்கான புதிய கட்டிடத்தொகுதி , வீடுகளின்றி வசித்து வந்த 12 குடும்பங்களுக்கான முழுமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் கணுகஹவௌ அபினவாராம விகாரைக்கான கட்டிடத் தொகுதியொன்றும் புனரமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நேற்று  வியாழக்கிழமை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மக்களிடம் கையளித்துள்ளார். இதேவேளை, கிராமத்தின் மறுசீரமைப்பு  பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றும் வருகின்றன.