உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது உட்பட பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை கூட்டு எதிர் கட்சியினர் கூடி கலந்துரையாட உள்ளனர். இதன் போது எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அறிவிக்க உள்ளதாக கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் கலந்துக் கொள்ளாதிருக்க கூட்டு எதிர்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு மலேஷியா சென்று நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் கூட்டு எதிர்கட்சி தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளனர். 

குறிப்பாக ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றதேர்தலை வைப்பதாக அரசாங்கம் தகவல்களை கசிய விட்டுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன்போது தனித்து போட்டியிடுவதற்கான சூழலை அமைத்தல் மற்றும் சின்ன குறித்து இரகசிய தன்மையை பேணுதல் போன்ற விடயங்கள் முக்கியமானதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பை கட்சி சம்மேளனத்தின் போது ஜனாதிபதி விடுத்த நிலையில் அதனை மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 

மேலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ முனின் இலங்கைக்கு விஜயத்தின் போது வழங்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் மலேஷியாவில் தாக்கப்பட்ட இலங்கை தூதுவரின் விவகாரங்கள் உள்ளிட்ட தேசிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளுதல் அதனூடாக மக்கள் அணித்திரட்டுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் வெள்ளிக்கிழமை சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.