இந்திய அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது.

இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 3 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1என கைப்பற்றியது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ராகுல் சஹர் 04 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இத் தொடரின் ஆட்டநாயகனாகவும் இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 12 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக இருபதுக்கு - 20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

பிறந்த நாளில் ஒருவரின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியையும் வனிந்து ஹசரங்க முறியடித்துள்ளார். இதுவரை தென்னாபிரிக்க அணியின் இம்ரான் தாஹிருக்கு இது சொந்தமாக இருந்தது.