(எம்.மனோசித்ரா)
செப்டெம்பர் 15 ஆம் திகதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறைவடையும். அதேபோன்று, 18 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஊடக மையத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கொவிட் தொற்றொழிப்புக்கான தடுப்பூசி  ஏற்றல் வேலைத்திட்டம், அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில்  ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

செப்டெம்பர் 15 ஆம் திகதிக்குள், 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறைவடையும். அதேபோன்று, 18 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், அப்பணிகள் முன்னெடுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களாவர்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முதலாம் கட்டத்தின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்டோரில் 11.5 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் 04 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் கூறியுள்ளார். இவ் வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.