(நா.தனுஜா)

நாட்டைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அரசியல் பழிவாங்கல்களாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யமாட்டோம் என்றுகூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள 13 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதேவேளை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மீளச்செலுத்தவேண்டிய கடன்களுக்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்குமான அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தொடர்பில் அடுத்தவாரம் நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.