(நா.தனுஜா)

ரிஷாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல. அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராவார்.

தேர்தலின்போது அவருடைய கட்சி எமது கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்டது. எனினும் தற்போதைய சமகால அரசியல் நிலைவரங்களுக்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படும் கூட்டணியில் ரிஷாட் பதியுதீனின் கட்சி இணைத்துக்கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

7 மூளைகள் உள்ள பஷில் இவ்வளவு காலம் என்ன செய்தார் - எஸ்.எம்.மரிக்கார் கேள்வி  | Virakesari.lk

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 ரிஷாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல. அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராவார்.

தேர்தலின்போது அவருடைய கட்சி எமது கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்டது.

எனினும் தற்போதைய சமகால அரசியல் நிலைவரங்களுக்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படும் கூட்டணியில் ரிஷாட் பதியுதீனின் கட்சி அங்கம்வகிக்காது.

ஏனெனில் அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தற்போது அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கிச்செயற்பட்டு வருகின்றார்கள். 

அவர்கள்தான் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிகொள்வதற்கும் அவர்கள்தான் அரசாங்கத்திற்கு உதவினார்கள்.

எனவே ரிஷாட் பதியுதீன் எமது தரப்பைச் சேர்ந்தவரல்ல. ஆனால் ரிஷாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது அரசாங்கத்துடனேயே இருக்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

அதேவேளை சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஐக்கிய மக்கள் சக்தி கொண்டிருக்கின்றது.

எனவே ஹிஷாலினி என்ற சிறுமியின் உயிரிழப்பு விவகாரம் தொடர்பில் அநாவசியமான ஊடகக்கண்காட்சிகளை நடத்தாமல், உரியவாறு விசாரணைகளை முன்னெடுத்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இவ்விடயத்தில் ரிஷாட் பதியுதீன் ஆளுங்கட்சியில் இருக்கின்றாரா? எதிர்க்கட்சியில் இருக்கின்றாரா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக முறையாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதே அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.