(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தன்னுடன் ஊடகங்களில் பகிரங்க விவாதத்தில் ஈடுபடுவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நான் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அமைச்சர் சரத் வீரசேகரவையும் இதற்கு தயாராகி எவரை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வந்து என்னுடன் விவாதத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்ற விசாரணைப் பிரிவில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முக்கியத்துவமற்ற ஒரு விடயம் தொடர்பில் சுமார் 5 மணித்தியாலங்கள் என்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சில அரசியல்வாதிகள் பதவியைப் பெற்றவுடன் பழைய விடயங்களை நினைவில் கொள்வதில்லை. அமைச்சர் சரத் வீரசேகர என்னைப்பற்றி பாராளுமன்றத்தில் பல விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் என்னுடன் நேரடி விவாத்ததில் ஈடுபட அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு அழைப்பு விடுக்கின்றேன். என்னை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சிரமப்படுத்துவதை விட இதனுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை இனங்காண்பதே முக்கியத்துவமுடையதாகும் என்றார்.