(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் கடந்த 6 மாதங்களில் 4,700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கலாநிதி முதித விதானபதிரண தெரிவிக்கையில்,

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் கடந்த 6 மாதங்களில் 4,700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகளில் எமது அதிகாரசபையின் விடயதானத்துக்கு சம்பந்தப்படாத முறைப்பாடுகளை அதனுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கு அனுப்பி இருக்கின்றோம்.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் முறைப்பாடுகளில் அதிகமானவை சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் தொந்தரவு, தாக்குதல், சித்திரவதைகள் மற்றும் இணையவழி ஊடான தொந்தரவு தொடர்பானவையாகும். 

குறிப்பாக பிள்ளைகளுக்கு இணையவழி ஊடான தொந்தரவு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதை காணமுடிகின்றது. கடந்த வருடத்தில் மாத்திரம் இணையவழி ஊடான தொந்தரவு தொடர்பில் 152 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அத்துடன் இந்த வருடத்தில் இதுவரை இணையவழி தொந்தரவு தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவாகி இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டில் 51 முறைப்பாடுகளும் 2018 இல் 48 முறைப்பாடுகளும் 2019 ஆம் ஆண்டு 52 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன என்றார்.