(எம்.மனோசித்ரா)

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லவுள்ளோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இப்பணிகள் இன்று ஆரம்பமாகின.

மேல் மாகாணத்தில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள 1,200 கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இணையவழியூடாக பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய இராணுவ மருத்துவ பிரிவினால் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இந்த பணிகள் ஆரம்பமான போது தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க , இராணுவ வைத்திய படையின் பணிப்பாளர் வைத்தியர் பிரிகேடியர் சந்திக அத்தனாயக்க ,  வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெணிய ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , வெளிநாடு செல்வோருக்கான கடவுச்சீட்டு மற்றும் தொழில் ஒப்பந்தம் என்பவை கிடைக்கப் பெற்றுள்ளவர்கள் இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்தின் ஊடாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்ததன் பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் தினம், நேரம் மற்றும் இடம் என்பன அறிவிக்கப்படும்.