(நா.தனுஜா)
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முழுப்பொறுப்பும் அதிகாரங்களும் சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டிருந்தால், தற்போது நிலைமை இந்தளவிற்குத் தீவிரமடைந்திருக்காது. ஆனால் சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் உள்ளடங்கலாக அனைத்துத் தீர்மானங்களும் அரசியல் மயமாக்கப்பட்டதன் விளைவாக எமது நாடு மிகமோசமான நிலைமையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகத் தனியொருவரால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் இப்போது நால்வரால் முன்னெடுக்கப்பட்டாலும் அதனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் தீவிரமடைந்து வரும் டெல்டா  வைரஸ் பரவல் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் அடையாளங் காணப்படும் 100 கொவிட் - 19 தொற்றாளர்களில் இருவர் உயிரிழப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இந்நிலை தொடருமாக இருந்தால், இன்னும் இருவார காலத்தில் எமது நாடு இந்தியாவின் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவ்வறிக்கையின் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தபோது, பொதுமக்கள் சுகாதாரப்பாதுகாப்பிற்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசீ பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தவேண்டியுள்ளது. 'உயர்மட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமைவாகவே நாட்டில் நடைமுறையிலிருந்த சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மாறாக அவை சுகாதார அமைச்சின் தேவைக்கு அமைவாகத் தளர்த்தப்படவில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினதும் மருத்துவ வசதிகளினதும் இயலுமையைப் பெருமளவால் அதிகரித்தாலும் அதனால் பயன்பெறமுடியாது. ஏனெனில் இவ்விடயத்தில் அரசியல்வாதிகளினால் அரசியல் ரீதியான தீர்மானங்களே மேற்கொள்ளப்படுகின்றன எனறார்.