நாட்டின் நெருக்கடி நிலை காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகமாகிக்கொண்டு வருவதால் பிள்ளைகளுக்கு போசாக்கான உணவை வழங்குவதே சிரமமாக மாறியுள்ளது. இதன் மத்தியில் கல்வி என்பதும் தற்போது எல்லோருக்கும் பொதுவானது என்பதிலிருந்து விலகிச் செல்வதை காணமுடிகிறது. 

ஒரு புறம் கொவிட் அனர்த்தத்துடனான இணையவழிக் கல்வி முறை பல மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் மறுபுறம் தற்போது சர்ச்சைக்குரிய கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் கல்வித்துறையின் சீரழிவு பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட நெருக்கடி நிலையை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திய ராஜபக்ஷ ஆட்சி, அதிகாரத்துடன் தொடர்புபட்ட பெரும் சட்டமாற்றங்களை முன்னெடுத்துள்ளது. 

எதேச்சாதிகாரத்தை முன்கொண்டுபோகும் வகையில் நிறைவேற்று ஜனதிபதிக்கு சர்வதிகார அதிகாரத்தை குவிக்கும் விதத்தில் 20ம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவந்தது.  இலங்கையின் இறைமையை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் கொழும்பு போர்ட் சிட்டி சட்டத்திற்கூடாக சிறப்பு நிர்வாக அதிகாரங்களுடன் உலகளாவிய மூலதனத்தை இலங்கைக்குள் குவிக்கும் முன்னெடுப்பு எங்கள் பொருளாதார எதிர்காலத்திற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் பின்னணியில்தான் உயர்கல்வி முறைமை மற்றும் தந்திரோபாயத்துடன் கொண்டுவரப்படும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பல்கலைக்கழகக் கல்வியினை இராணுவ மயமாக்கவும் தனியார்மயமாகவும் வழிவகுப்பதோடு இலவச கல்வியையும் தாக்குகின்றது.  

இந்த சட்டமூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேற்பார்வைக்கு வெளியே ஒரு பல்கலைக்கழகத்தினை உருவாக்க முயற்சிக்கிறது. மாறாக 1978ம் ஆண்டின் பல்கலைக்கழக சட்டத்தை மாற்றும் அரசாங்கத்தின் முயற்சி உயர்கல்வியில் குழப்பநிலையை உருவாக்கும். கடந்தவாரம் ஊடகங்களில் குறிப்பிட்டிருப்பது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ரூபா. 3,600 கோடி (36 பில்லியன்) நிதியமைச்சின் உத்தரவாதத்துடன் அரச வங்கிகளால் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 

இங்கு வேடிக்கைக்குரிய விடையம் என்னவென்றால் கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் வரும் அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களுக்குமான அரச ஒதுக்கீடு சராசரியாக 6,000 கோடி (60 பில்லியன்). இவ்வாறான பல்கலைக்கழகங்களையும் இலவசக் கல்வியையும் பாதிக்கும் விடயங்களை மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றமும் மக்கள் அமைப்புகளும் எவ்வாறு கையாளப்போகின்றன?

சட்டமாற்றமும் நிதி ஒதுக்கீடும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவானது இலவச கல்வியை முன்கொண்டு போகும் விதத்தில் உருவாக்கப்பட்டது. உதாரணமாக பட்டத்தின் தரநிலையை உறுதி செய்வதுடன் பட்டப்படிப்பிற்கான மாணவர்களை பண வசதியைப் பாராமல் தகுதி அடிப்படையில் தெரிவு செய்கிறது. 

கொத்தலாவல சட்டமூலம் என்பது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்கு முரணான வகையில் வேறு நிறுவனங்களை அதன்கீழ் உருவாக்க அனுமதியை  வழங்குகின்றது.  மேலும் பல்கலைக்கழக முறையையும் கல்வி கலாச்சாரத்தின் ஐனநாயக தன்மையையும் மற்றும் கருத்துச் சுதந்திரத்தையும் இது பாதிக்கும். கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் இராணுவத்தால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும். இதில் மாணவ எதிர்ப்புக்களை ஒடுக்கவும் தேசியப் பாதுக்கப்பு என்ற போர்வையில் மாணவர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களும் உண்டு.

இந்த சட்ட மூலத்திற்கான எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கம் 1978ம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத்தை மாற்றி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு கீழ் கல்வி அமைச்சர் விரும்பும் விதத்தில் சிறப்பு நோக்கங்களுக்கான பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை கொடுக்க முனைகிறது. இங்கு சிறப்பு நோக்கம் என்பது கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை குறிக்கிறது. 

மேலும் கல்வி அமைச்சருடைய அதிகாரத்தை குவிப்பதனூடாக தேசிய பல்கலைக்கழக முறையை மாற்றும் இந்த செயற்பாடு எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களின் தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும். உதாரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான தற்போதைய வருடாந்த கட்டணம் அதன் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதன்படி பத்தாயிரம் அமெரிக்க டொலர் (ரூபா. 2,000,000). பல்கலைக்கழக கல்வி கற்க தகுதி உள்ள அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள்  தற்போது பல்கலைக்கழக முறைமைக்குள் உள்வாங்கப்படமுடியாமல் இருக்கிறார்கள். 

அவர்கள் வெளிநாட்டுக்கல்வியினை தேடிச்செல்வதால் நாட்டிற்கு வெளியே பணம் செல்கிறது என்பது ராஜபக்ஷ அரசாங்கத்தின் வாதம். இதற்கு அவர்கள் குறிப்பிடும் தீர்வுகள் கட்டணம் அறவிடும் பல்கலைக்கழகங்களை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை வணிகமயமாக்கப்பட்ட பதிவுகள் ஊடக உள்வாங்கி வருமானத்தை பெற்றுக்கொள்வதாகும். இவ்வாறாக மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கட்டணங்களுடாகவா மேற்குறிப்பிட்ட ரூபா. 3,600 கோடி (36 பில்லியன்) கடனை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மீளச்செலுத்தப்போகிறது? 

இவ்வாறு இலவசக்கல்வி நிராகரிக்கப்பட்டு எதிர்கால மாணவர்கள் கடனாளிகளாக மாறும் அச்சமுண்டு.உண்மையில் பிரச்சினை என்னவென்றால் திறந்த பொருளாதார கொள்கைகளுக்கு பின்னர் வந்த அரசாங்கங்களால் கல்விக்கான அரச செலவாக மொத்த தேசிய உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறையவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் பத்து வருடத்திற்கு முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் யுநெஸ்கோவின் பரிந்துரைப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம்  பெறுமதியை கல்விக்கான தேசிய செலவாக ஒதுக்கவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தது.  

உண்மையில் கல்விக்கான அரச செலவுகளை தொடர்ச்சியாக அதிகாரிப்பதற்கூடாகவே மேலதிகமாக எமது இளைஞர்களை பல்கலைக்கழத்திற்குள் உள்வாங்கலாம். வரலாற்று திருப்புமுனை இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட பெரும் நெருக்கடிகள்  முற்போக்கான விளைவுகளையும் பிற்போக்கான விளைவுகளையும் கொண்டுவந்துள்ளது. 

1930களில் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னர்தான் கல்வியில் ஒரு பெரும் முற்போக்கான மாற்றம் வந்தது. 1944ம் ஆண்டு கல்விக்கான விசேட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தேசிய சபைக்கு முன்வைத்த கல்வி அமைச்சரான C.C.W  கண்ணங்கரா பின்வருமாறு குறிப்பிட்டார்: "நாம் கல்வியினை விலை உயர்ந்த நிலையில் கண்டதால் அதை மலிவானதாக்கினோம் அதை மூடிய புத்தகத்தில் கண்டதால் திறந்த கடிதமாக்கினோம்; அதை நாம் பணக்காரரின் ஆதிக்கத்தில் கண்டதால் ஏழைகளின் சொத்துரிமையாக்கினோம்" என்று தேசிய சபை சொன்னால் எவ்வளவு உன்னதமாக இருக்கும். 

இவ்வாறாக தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியை விட மோசமான நெருக்கடிக் காலத்தில் பல நாடுகளால் கைவிடப்பட்ட இலவசக்கல்வியினை இலங்கையில் நிறுவமுடிந்தது. ஆனால், 1970களில் ஏற்பட்ட பொருளாதார சரிவு ஆட்சிக்கு வழிவகுத்து பிற்போக்கான மாற்றங்களை கொண்டுவந்தது. அது பொது மக்களுக்கான உணவு மானியத்தை நிறுத்தி பின்கதவு வழியாக சுகாதாரம் மற்றும் கல்வியினை தனியார்மயப்படுத்தியது. 

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி கல்விசார்ந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறான மாற்றங்களை கொண்டுவரும்? கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமான போராட்டங்கள் எதிர் வரும் தசாப்தங்களில் கல்வியின் தன்மையை தீர்மானிக்கும் ஒன்றாகும். இலங்கையில் இலவசக்கல்வி நிறுவப்படுவதற்கு அடிப்படை அனுமானமாக இருந்த இவ்வாறான முறைமையே தற்போதைய சூழலிலும் ஜனநாயகமயமாக்கலுக்கு தேவையாது. 

இலங்கையின் வரலாற்றில் ஜனநாயக போராட்டங்களே இலவசக்கல்வியினை பாதுகாத்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கம் இந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி கல்வியை இராணுவமயம் மற்றும் தனியார்மயமாக்க முயற்சிக்கின்றது. இந்த நிலையில் முற்போக்கு சக்திகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள விவாதத்ததை எமது கல்வி முறைமையின் முற்போக்கான எதிர்காலத்திற்கான ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும்.

கலாநிதி. அகிலன் கதிர்காமர்சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்