டெல்டா கொரோனா வைரஸ் உலகின் 132 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் பரவலால் கடந்த வாரம் 19 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை 38 இலட்சம் புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முன்னைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக  ஐ.நா சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்போதைய தரவின்படி, அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில்  கணிசமான அதிகரிப்பை காட்டியுள்ளது.

கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,40,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன, முன்னைய வாரத்தில் நாளாந்தம் 4,90,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.

69,000 க்கும் அதிகமான இறப்புகளுடன் இந்த வாரம் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது, இது முன்னைய வாரத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 19 கோடியே 52 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, 41 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனாவின் ஆல்பா வைரஸ் 182 நாடுகளிலும், பீட்டா வைரஸ் 131 நாடுகளிலும், காமா வைரஸ் 81 நாடுகளிலும் டெல்டா வைரஸ் 132 நாடுகளிலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.