உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து இடங்களிலும் கை கழுவுவதற்கும் சனிடைசர் ஜெல் பயன்படுத்துவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், அபுதாபியில் 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வணிக வளாகம் ஒன்றிக்கு சென்றிருந்த போது, அங்கு காலினால் அழுத்தத்தை பிரயோகிக்கும் போது கையில் சனிடைசர் ஜெல் விழுவது போன்று வடிவமைக்கப்பட்ட இயந்திரம் இருந்துள்ளது.

அங்கு அந்த சிறுமி தனது காலினால் அழுத்தத்தை பிரயோகித்த போது சனிடைசர் ஜெல் அந்த சிறுமியின் கண்ணில் பட்டுள்ளது. கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதாலும் வலி அதிகரித்ததாலும் வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமியின் கருவிழிப்படலம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். 

அதிலுள்ள அல்கஹோல் மற்றும் இரசாயனங்கள் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், அவசர சிகிச்சையின் பின்னர் சிறுமிக்கு அதன் பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். 

மேலும் சனிடைசர் போன்ற இரசாயன கலவைகளை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறுவர்கள் இருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.