டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஜூலை 24, 1983 - தமிழர்களுக்கு எதிரான நாசகாரத்தனமான வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் அதிகாலைவேளையில் தொடங்கிய தினமாகும். அன்றைய தினமே மாலையில் அந்த வன்செயல்கள் தலைநகர் கொழும்புக்கு பரவத்தொடங்கின. அடுத்து வந்த நாட்களில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அது பரவியது. ' கறுப்பு ஜூலை'  என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்ட  அந்த நாட்களின் 38 வது வருட நிறைவு 1983 ஜூலையில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் மோசமான நினைவுகளை மீட்கிறது.

  ஒருவார காலமாக தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட  வன்செயல்களில் 4000 க்கும் அதிகமான  தமிழர்களும் தமிழர்கள் என்று தவறாக கருதப்பட்ட முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் வைத்தியசாலைகளில் வைத்து கொல்லப்பட்டனர். அந்த வன்செயல்களின் விளைவாக 3 இலட்சம் வரையானவர்கள் தங்கள் வீடுவாசல்களை இழந்து இடம்பெயர்ந்தார்கள். இவர்களில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் தற்காலிக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் தொடங்கி சிறிய கடைகள் வரை 2500 க்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டன அல்லது நிர்மூலஞ்செய்யப்பட்டன. சேதமாக்கப்பட்ட அல்லது நிர்மூலஞ் செய்யப்பட்ட வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக மதிப்பிடப்படவில்லை.

தமிழர்களுக்கு எதிரான 1983 ஜூலை வன்செயல்கள் தமிழர்களுக்கு எதிரான சிங்கள மக்களின் ஒரு கிளர்ச்சி அல்ல. அந்த வன்செயல்கள் வெடிப்பதற்கு முன்னதாக தமிழர்கள்  மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் பரந்தளவில்  வன்செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு சதித்திட்டமொன்று தீட்டப்பட்டிருந்தது. அத்தகைய வன்செயல்களைக்  கட்டவிழ்த்து விடுவதற்கு சாட்டாக ஒரு வலுவான சம்பவம் மாத்திரமே தேவைப்பட்டது. ஜூலை 23 சனிக்கிழமை வடக்கில் இராணுவ ரோந்து வாகனங்கள் மீது விடுதலை புலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் ஜூலை 24 தொடங்கி நாடுபூராவும் வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு சாட்டாகியது.

  நடந்தது இதுதான். 1983 ஜூலை 23 சனிக்கிழமை இரவு மாதகல் இராணுவத்தளத்தில் இருந்து வழமையான ரோந்து வாகனங்கள் புறப்பட்டன. ஒரு ஜீப்பிலும் சிறிய ட்ரக்கிலும் 15 படையினர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா லைற் இன்ஃபான்றி படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலைமை தாங்கியவர்  கொழும்பு ஆனந்தா கல்லூரி பழைய மாணவரான 2வது லெப்ரினண்ட் வாஸ் குணவர்தன.

  அதேவேளை, விடுதலை புலிகள் இராணுவம் மீதான தாக்குதலை யாழ்ப்பாண நகரத்தில் இருந்து சுமார் 2 மைல்கள் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். புலிகளின் புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த  கல்வியங்காட்டைச் சேர்ந்த சதாசிவம் செல்வநாயகம் என்ற செல்லக்கிளி தாக்குதலை பிரபாகரனின் ஆதரவுடன் திட்மிட்டு மேற்பார்வை செய்தார்.யாழ்.- பலாலி வீதியில் தபால் கட்டைச் சந்தியில் இருந்து தெற்கே 150  மீட்டர் தொலைவில் உள்ள இடமே தாக்குதலுக்கென்று தெரிவுசெய்யப்பட்டது. வீதி ஏற்கெனவே தொலைத்தொடர்பு கேபிளை புதைப்பதற்கென்று தோண்டப்பட்டிருந்தது. புலிகள் கண்ணிவெடிகளை புதைப்பதற்கு இது வசதியாக இருந்தது.

   நான்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு அவை  வீதியை எதிர்நோக்கியிருந்த தேனீர்க்கடை ஒன்றின் கூரைக்கு கீழ் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிக்கவைக்கும் கருவியுடன் இணைக்கப்பட்டன. சரியான நேரத்தில்  கண்ணிவெடிகளை வெடிக்கவைப்பதற்காக செல்லக்களி கூரையில் மறைந்திருந்தார். ஏனைய புலிகள் வீதியின் இரு மருங்கிலும் இருந்த மதில்களுக்கு பின்னால் ஒளிந்திருந்தனர்.

  விடுதலை புலிகளிடம் அந்த நேரத்தில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட 30 முழுநேர உறுப்பினர்களே இருந்தனர். இவர்களில் 19 பேர் திருநெல்வேலி தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்தனர்.பிரபாகரன், செல்லக்கிளி, புலேந்திரன், பொன்னம்மான், றெஜி, ரஞ்சன் லாலா, கிட்டு, சந்தோசம், விக்டர், அப்பையா, கணேஷ், லிங்கம், அல்பேர்ட், பஷீர், ராஜேஷ், சுப்பண்ணா, ராமு, ஞானம் மற்றும் ரகு (குண்டப்பா) ஆகியோரே அவர்கள்.

  இரு வாகனங்கள் அண்மித்தபோது கண்ணிவெடிகள்  வெடிக்கவைக்கப்பட்டன. அவை ஜீப்பின் வலது பக்கத்திலும் ஜீப்புக்கும் ட்ரக்கிற்கும் இடையிலும் வெடித்தன. அதையடுத்து புலிகள் துப்பாகாகிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்ததுடன் கிரனேட்டுக்களையும் வீசினர். படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இறுதியில் வாஸ் குணவர்தன உட்பட 13 படையினர் கொல்லப்பட்னர். கோப்ரல் பெரேரா, லான்ஸ் கோப்ரல் சுமதிபால என்ற இரு படையினரே உயிர்தப்பியவர்கள். புலிகள் தரப்பில் செல்லக்கிளி மாத்திரமே காயமடைந்தார்.

  படையினர் வெறியாட்டம்
புலிகளின் தாக்குதல் பற்றிய செய்தி தெரியவந்ததும் ஸ்ரீலங்கா லைற் இன்ஃபான்றி படைப்பிரிவைச்சேர்ந்த படையினர் வெறியாட்டத்தில் இறங்கினர். அவர்களின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் உபாலி தர்மரத்ன படையினரை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது இயலாமல் இருந்தார். யாழ்ப்பாணம் முழுவதற்குமான தளபதி பிரிகேடியர் லைல் பல்தசாரும் கூட தனது அதிகாரத்தை செலுத்த இயலாதவராகவோ அல்லது தனது துருப்புகள் மத்தியில் ஒழுங்கு கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியாதவராகவோ இருந்தார்.

 சீற்றங்கொண்ட படையினர் கட்டவிழ்த்துவிட்ட வன்செயல்களில் திருநெல்வேலியிலும் சூழவுள்ள பகுதிகளிலும் 51 குடிமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் நான் நன்கறிந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலா பரமேஸ்வரனும் ஒருவர். ஏழு பயணிகளுடன் வந்த மினிவான் ஒன்று இடைமறிக்கப்பட்டு சாரதி உட்பட எட்டுப்பேரும் நிரையாக நிற்கவைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். எனது நண்பரும் மனிதன் என்ற சஞ்சிகையின் ஆசிரியரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான விமலதாசனும் ஒருவர். இந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் அடுத்து இராணுவ தளபதி ஜெனரல் திஸ்ஸ ' புள்' வீரதுங்க  லைற் இன்ஃபான்றி படைப்பிரிவை யாழ்ப்பாணத்தில் இருந்து இடமாற்றினார். லெப்.கேணல் தர்மரத்னவுக்கு பதிலாக லெப்.கேணல் ஏ.எம்.யூ.செனவிரத்ன  நியமிக்கப்பட்டார்.

 ஜே.ஆர்.ஜெயவர்தன  தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் புலிகளினால் கொல்லப்பட்ட 13 படையினருக்கும் ஒரே இறுதிச்சடங்கை  கனத்தையில் நடத்தியது. ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமை கனத்தையில் பெருமளவில் மக்கள் கூடினர்.பலர் அரசாங்க வாகனங்களில் அங்கு கொண்டுவரப்பட்னர். மாலையானதும் நிலைவரம் வன்முறையாக மாறத்தொங்கியது. கனத்தையில் இருந்து கும்பல்கள் பொரளை மற்றும்  திம்பிரிகஸ்யாய பக்கமாக நகர்ந்தது. தமிழர்களின் வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. எசல போயா முழுமதி வானத்தில் பிரகாசமாக தோன்றிக்கொண்டிருக்க  தமிழர்களின்  நிறுவனங்களில் இருந்து புகைமண்டலம் வான் நோக்கி கிளம்பிக்கொண்டிருந்தது.

  "சண்டே சில் மண்டே கில்"
மறுநாள் ஜூலை 25 தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் காட்டுத் தீ போன்று பரவின. இந்த வன்செயல்களை மலையக தோட்டத்தொழிலாளர்களின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் " சண்டே சில், மண்டே கில்" என்று பின்னர் வர்ணித்தார். ஞாயிற்றுக்கிழமை போயாதினத்தன்று தொடங்கிய வன்செயல்கள் மறுநாள் திங்கட்கிழமை நாடெங்கும் பரவிய காரணத்தாலேயே அவர் அவ்வாறு கூறினார்.

    ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு அன்றைய பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் திரும்பத்திரும்ப கேட்டபோதிலும், ஜனாதிபதி ஜெயவர்தன திங்கட்கிழமை மாலை வரை அத்தகைய உத்தரவை பிறப்பிப்பதை தாமதித்தார்.ஊரடங்கு அமுலில் இருந்ததாக கூறப்பட்டபோதிலும், மூன்று நாட்களுக்கு வன்செயல்கள் தொடர்ந்தன.அவை ஜூலை 27 ஒரு உச்சத்துக்கு வந்தன.

இந்திய பிரதமர் இந்திரா காந்தி தனது வெளியுறவு அமைச்சர் பி.வி.நரசிம்மராவை கொழும்புக்கு விசேட தூதராக அனுப்பிய ஜூலை  28 வியாழக்கிழமை வன்செயல்கள் சற்று தணியத்தொடங்கின.

  ஜூலை 29 வெள்ளிக்கிழமை கொழும்புக்கு புலிகள் வந்துவிட்டார்கள் என்று பரவிய வதந்தியால் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் மக்கள் பீதியடைந்தார்கள்.அந்த விதிவசமான " கொட்டி தவச" (புலி தினம்) அன்று பிற்பகல் தமிழர்களை மீண்டும் குண்ர்கள் கொலைசெய்தார்கள்.புலிகள் கொழும்புக்கு வரவில்லை என்று உறுதியானதன் பின்னரும் கூட படுகொலைகள் தொடர்ந்தன.இறுதியாக, ஜூலை 30, 31 திகதிகளில் வன்செயல்கள் படிப்படியாக தணிந்தன. நிலைவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஜெயவர்தன அரசாங்கத்தை சர்வதேச அபிப்பிராயங்களும் நெருக்குதல்களும் நிர்ப்பந்திக்க ஆரம்பித்த நிலையில் , ஆகஸ்ட் அளவில் வன்செயல்கள் முடிவுக்கு வந்தன.

  இந்திரா காந்தி -நரசிம்மராவ்
பொதுவில் இந்தியாவும் குறிப்பாக பிரதமர் இந்திராவும் வகித்த பங்கு அந்த நேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின.தமிழ்நாட்டுக்கு வருவதற்கு ஏற்கெனவே திட்மி்ட்டிருந்த இந்திரா அந்த விஜயத்தை ரத்து செய்தார். பதிலாக, ஜூலை 28 வியாழக்கிழமை காலை அவர் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதுடன் தனது வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை மாலையில் தனது விசேட தூதுவராக கொழும்புக்கு அனுப்பிவைத்தார்.

  நரசிம்மராவ் ஜனாதிபதி ஜெயவர்தன, பிரதமர் பிரேமதாச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீது ஆகியோரைச் சந்தித்தார்.எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துடன் நரசிம்மராவ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அமைச்சர் தொண்மானுடனும் அவர் " உத்தியோகபூர்வமற்ற" சந்திப்பொன்றை நடத்தினார். புதுடில்லிக்கு திரும்புவதற்கு முன்னதாக அவர் தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை பொலிசாரினாலும் பாதுகாப்பு படையினராலும்  இயலாவிட்டால் இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு இந்தி பாதுகாப்பு படையினரின் உதவி கொழும்புக்கு தேவையா என்று ஹமீதிடம் வினவினார்.ராவ் புறப்பட்டுச் சென்றபிறகு நிலைவரத்தில் குறிப்பித்தக்க மாற்றத்தை காணக்கூடியதாகஇருந்தது.தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்செயல்கள் தணியத்தொடங்கிய அதேவேளை, சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்தும்  இயந்திரம் அதிசயிக்கத்தக்க வகையில் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கச்செய்யப்பட்டது.

      கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில்  இராணுவத்தினர் மீது  புலிகள் நடத்திய தாக்குதலுக்கு சிங்கள மக்களின் தன்னியல்பான எதிர்வினை என்று விளக்கமளிக்க ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தனவும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் முயன்றார்கள்.' வன்செயலுக்காக சிங்கள மக்கள் ஜனாதிபதியினாலும் அவரது அரசாங்கத்தினாலும் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.அரசாங்கம் செய்த தவறுகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது".

 சிங்கள மக்களை குற்றஞ்சாட்டுதல்
ஆனால், 83 கறுப்பு ஜூலையின் இருண்ட நிகழ்வுகளுக்காக சிங்கள மக்களை ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களை குற்றஞ்சாட்டுவதில் பெரியதொரு தவறு இருக்கிறது.வன்செயல்களில் ஈடுபட்வர்கள் சிங்களவர்கள் என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதும் சரியானதே.ஆனால், இது எந்த வகையிலும் தமிழர்களுக்கு எதிரான முழு சிங்கள இனத்தினதும் கிளர்ச்சி என்றாகிவிடாது. அவ்வாறு நந்திருந்தால், சொற்ப எண்ணிக்கையான தமிழர்களே விட்டுவைக்கப்பட்டிருப்பர்.

  நடந்தேறிய சம்பவங்களைக் கண்டு பல சிங்கள மக்கள் கிலி கொண்டார்கள்.அவர்கள் எதையும் செய்யமுடியாத வெறும் பார்வையாளர்களாக இருந்த அதேவேளை, அவர்களது இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையானவர்கள் சிங்கள இனத்தின் பேரில் அனர்த்தங்களை விளைவித்தார்கள்.வன்செயல்களில் பங்கேற்காத மக்களில் ஒரு பிரிவினர் மௌனம் சாதித்ததன் மூலமாக தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களை ஆதரித்திருக்கக்கூடும்.ஆனால், சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் நடந்தவற்றுக்கு எதிரானவர்களாகவே இருந்தனர்.தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பெரும் எண்ணிக்கையான சிங்களவர்கள் தமிழர்களைப் பாதுகாத்தார்கள் என்பதை மறக்கமுடியாது.அந்த இருண்ட நாட்களில் பல முஸ்லிம்களும் கூட, தமிழ் அயலவர்களுக்கு புகலிடம் அளித்தார்கள்.எனது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கும்  பல உறவினர்கள் மற்றும்  நண்பர்களுக்கும்  பண்பான சிங்கள, முஸ்லிம் மக்கள் அந்த குழப்பகரமான நாட்களில் உதவினார்கள்.

  1983 ஜூலை தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களின்போது ஜனாதிபதி ஜெயவர்தனவின் நடத்தையும் அவர் வகித்த பங்கும் பரவலாக விமர்சனத்துக்குள்ளானது. உண்மையில், நிலைவரம் பாரதூரமானதாகப் போவதற்கு ஜெயவர்தனவே பொறுப்பு என்று பலரும் கண்டித்தார்கள்.கொழும்பில் கனத்தையில் 13 படையினருக்கும் ஒன்றாக இறுதிக்கிரியைகளை நடத்துவதற்கு எடுத்த தீர்மானமும் ஊரடங்கை பிறப்பிப்பதில் காட்டிய நீண்ட தாமதமும் நிலைவரத்தை மோசமாக்கின.1983 ஜூலையில் ஜெயவர்தன செய்தவற்றையும் செய்யத்தவறியவற்றையும் பற்றிய நுண்ணோக்கு ஒன்றை தருவதற்காக நான் இங்கு முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் இராமச்சந்திரா சுந்தரலிங்கம் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றை தருகிறேன்.

பிரதி பொலிஸ்மா அதிபர் சுந்தரலிங்கம்
சுந்தா என்று அறியப்பட்ட சுந்தரலிங்கம் இலங்கையில் எனது தலைமுறை பத்திரிகையாளர்களின் மிகவும் நல்ல நண்பர்.சட்டம், ஒழுங்கு பற்றிய நல்ல செய்தி ஒன்று எமக்கு வேண்டுமென்றால், சுந்தரலிங்கத்துடன் தொடர்புகொண்டால் போதும்.83 ஜூலை தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களின்போது பல பிராந்தியங்களுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அவர் பணியாற்றினார்.பிறகு சுந்தா பாரிஸில் இன்டர்போலில் பதவியொன்றைப் பெற்று அங்கு பணியாற்றவதற்கு போனார்.போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிப்பதில் பெரும் நிபுணராக அவர் விளங்கினார். ஓய்வு பெற்ற பிறகு தமிழ்நாட்டின்  சென்னையில் அவர் வசித்தார்.2018 டிசம்பரில் மரணமடையும் வரை அவருக்கும் எனக்கும் இடையே கிரமமான ஈ மெயில் தொடர்பு இருந்துவந்தது.

  இந்த கட்டுரைக்காக நான் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது சுந்தா எனக்கு 2017 டிசம்பரில் அனுப்பிய ஈ மெயில் ஒன்று அகப்பட்டது.1983 ஜூலை வன்செயல்கள்  பற்றி என்னுடன் பேசுவதற்கு விரும்பிய அவர் வீட்டு  தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொண்டார்.நான் வீட்டில் அந்த நேரத்தில் இருக்கவில்லை என்பதால் உடனடியாக பதிலளிக்கமுடியவில்லை.அமைதியிழந்த சுந்தா தான் சொல்லவிரும்பியவற்றை சுருக்கமாக ஈ மெயிலில் அனுப்பினார்.ஆனால், பிறகு நாம் தொலைபேசியில் உரையாடினோம்.ஈ மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தவற்றை பற்றி விரிவாக பேசினோம்.ஆனால், அந்த ஈ மெயிலை இங்கே தருவது அப்போது நடந்தவை பற்றி கூடுதல் தெளிவை கொடுக்கும் என்று நம்புகிறேன்.


  சுந்தாவின் ஈ மெயில் அன்புடன் டி.பி.எஸ்ஸுக்கு, 
தொலைபேசியில் தொடர்புகொள்ள தவறும் பட்சத்தில்,இலங்கையின் வரலாற்றில்  1983 ஜூலையில் நடந்தவை பற்றி சுருக்கமாக உண்மைகளை கூற விரும்புகிறேன்.

(1) 1983 ஜூலை 23 தின்னவேலியில் புலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர். இராணுவ தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டது.ஜனாதிபதி ஜே.ஆர். ஜெனரல் ஆட்டிக்கல ஊடாக இராணுவ தளபதி வீரதுங்கவை உனடியாக யாழ்ப்பாணத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

(2) வடமாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ராஜகுரு பொலிஸ்மா அதிபர் ருத்ரா இராஜசிங்கத்துடனும் என்னுடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இராணுவம் வெறியாட்டத்தில் இறங்கியிருப்பதாகவும் பொலிசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று கூறினார்.

(3) யாழ்ப்பாணத்திலும் மற்றைய பகுதிகளிலும் நடப்பவற்றை கண்காணிக்க அங்கு சென்ற இராணுவ தளபதியை தவிர, படைகளின் பிரதானிகள், கடற்படை, விமானப்படை தளபதிகள் எல்லோரும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜகுருவை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்பதால் நானும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவேண்டுமென்று பொலிஸ் மா அதிபர இராஜசிங்கம் விரும்பினார்.

(4) ஜெனரல் ஆட்டிக்கல இராணுவ தளபதி வீரதுங்கவுடன் பல மணி நேர ( பிற்பகல் 3/மாலை 7) கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.யாழ்ப்பாணத்தில் இராணுவம் கிளர்ந்தெழுந்து பலரைக் காயப்படுத்தியும் சொத்துக்களை சேதப்படுத்திக்கொண்டும் இருந்த நிலையில் யாழ். நிலைவரம் மோசமாகிக்கொண்டிருந்தது.தளபதி வீரதுங்கவினால் நிலைவரத்தை கட்டுப்படுத்த எதையும் செய்யமுடியவில்லை.கள நிலைவரத்தை ஆட்டிக்கல ஜே.ஆருக்கு அறிவித்தார்.வழமையாக போர்ச் சூழ்நிலைகளில் நடப்பதைப் போன்று படையினரின் சடலங்களை யாழ்ப்பாணத்திலேயே புதைக்குமாறு ஆட்டிக்கலவிடம் ஜே.ஆர். கூறினார்.இந்த செய்தி வீரதுங்கவிடம் கூறப்பட்டபோது " சேர் நானும் அங்கேயே புதைக்கப்படுவேன்.சடலங்களை படையினரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு ஒழுங்குகளைச் செய்யுங்கள் " என்று அவர் உடனடியாக பதிலளித்தார்.

  (5) சடலங்களை கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு விமானத்தில் கொண்டுவந்து பதப்படுத்தியபின்னர் 13 சடலங்களையும் 13 ஊர்களுக்கு  அனுப்புவதென்று பாதுகாப்பு சபை முடிவெடுக்கிறது.13 குளிரூட்டப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளை தயார் செய்யுமாறு பொலிசாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. ஆட்டிக்கலவுடன் கலந்துபேசி ஜே.ஆர்.இந்த ஏற்பாடுகளை அங்கீகரித்தார்.இவை எல்லாவற்றுக்கும் நான் கண்கண்ட சாட்சி.

 (6) அம்புலன்ஸ் ஏற்பாட்டை ரத்துச் செய்யுமாறும் சடலங்களை கனத்தையில் புதைப்பதற்காக இரத்மலானைக்கு விமானத்தில் கொண்டுவருமாறு பொலிஸ் தலைமையகத்துக்கு பணிப்புரை கிடைக்கிறது.அதேவேளை, கொழும்பில் பதற்றம் அதிகரிக்கிறது.கனத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத்தொடங்கினார்கள்.

 (7)  ருத்ரா இராஜசிங்கமும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏரனெஸ்ட் பெரேராவும் கனத்தைக்கு விஜயம் செய்தார்கள்.எங்கு பார்த்தாலும் பதற்றமாகவே இருந்தது.நிலைவரம் பாரதூரமானது  என்பதை என்னால் உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.ஜனாதிபதியை உடனடியாக சந்தித்து இரவு 9 மணியளவில் ஊரடங்கை பிறப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அல்லாவிட்டால் நிலைவரம் கட்டுமீறிப்போய்விடும் என்றும்  பிரதி பொலிஸ்மா அதிபர் பெரேராவும் நானும் இராஜசிங்கத்துக்கு கடுமையாக ஆலோசனை கூறினோம். பொலிஸ்மா அதிபர் கனத்தையில் இருந்து வார்ட் பிளேஸுக்கு ஜே.ஆரைச் சந்திக்க  புறப்பட்டார்.மறுநாள் மாலை வரை ஒருபோதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்படவில்லை.ஆனால் அந்த நேரமளவில் தமிழர்களுக்கும் அவர்களது சொத்துக்களுக்கும்  பாரதூரமான அழிவு ஏற்படுத்தப்பட்டுவிட்டது.இந்த நாட்டின் வரலாற்றில் இது மிகவும் மோசமானதாக இருந்தது.இந்த நிலைவரத்தை ஜே.ஆரினால் தவிர்த்திருக்கமுடியும்.ஆனால், ஊரடங்கை பிறப்பிக்க அவர் தவறினார்.கனத்தையில் சடலங்களை ஒன்றாக புதைப்பதற்கான தீர்மானத்தை எடுத்தவர் யார்? இது மிகப்பெரியதொரு கேள்வி.கனத்தையில் இறுதிச்சடங்குகளை நடத்தவேண்டுமென்று சிறில் மத்தியூவே வலியுறுத்தியதாக அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.இதெல்லாம் இப்போது வரலாறாகிவிட்டது".

    1983 ஜூலை வன்செயல்கள் அடிப்படையில் திட்டமிடப்பட்டவை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்.பலர் தாங்களாகவே வன்செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும்.ஆனால், வெவ்வேறு இடங்களில் மையக்குழுக்கள் வன்செயல்களை திட்டமிட்டு செய்தன.இந்த குழுக்களுடன் மற்றையவர்கள் இணைந்துகொள்வதே கும்பல் வன்முறைகளின் பொதுவான அம்சமாகும்.குழுக்கள் சட்டத்துக்கு பயப்படாமல் செயற்பட்டன.அப்போது அதிகாரத்தில் இருந்த ஐ.தே.க. அரசாங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களின் பாதுகாப்பு இக்குழுக்களுக்கு இருந்தது.

   வன்செயல் கும்பல்களிடம் தமிழர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பட்டியல்கள் இருந்தன.வீடுகளும் வியாபார நிறுவனங்களின் கட்டிடங்களும் சிங்களவர்களுக்கு சொந்தமானவையாக இருந்தால், அவற்றில் வாடகைக்கு இருந்த தமிழர்களின் தளபாடங்களும் பொருட்களும் மாத்திரம்  சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டன.கட்டிங்கள் சேதப்படுத்தப்படவோ தீவைக்கப்படவோ இல்லை.

  பல கும்பல்களுக்கு ஐ.தே.க.வின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவின் முக்கியஸ்தர்கள் தலைமைதாங்கினார்கள்.ஐ.தே.க.வின் மாநகரசபைகளினதும் நகரசபைகளினதும் உறுப்பினர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வன்செயல்களில் ஈடுபட்டார்கள்.ஐ.தே.க.வின் முக்கியமான ஆதரவாளர்களும் அமைச்சர்களின் அடியாட்களும் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.பல சந்தர்ப்பங்களில் வன்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டாமென்று ஐ.தே.க. அரசியல்வாதிகள் பொலிசாருக்கு உத்தரவிட்டனர்.

  பல சந்தர்ப்பங்களில் பெரும் எண்ணிக்கையான  காடையர்களும் கும்பல்களும் அரசுக்கு சொந்தமான  போக்குவரத்து சபை வாகனங்களிலும் கூட்டுத்தாபனங்களின் வாகனங்களிலும் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். வன்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உணவுப்பொதிகளும் மதுபானமும் திட்டமிட்ட முறையில் விநியோகிக்கப்பட்டன.

  ஷெல்டன் ரணராஜா மற்றும் ரேணுகா ஹேரத் ரணசிங்க போன்ற கண்ணியமான சில ஐ.தே.க. தலைவர்களின் வற்புறுத்தலில் கண்டியிலும் நுவரேலியாவிலும் காடையர்களை பொலிசார் கைதுசெய்து தடுத்துவைத்தபோது அவர்களை அமைச்சர்கள் சிறில் மத்தியூவும் காமினி திசாநாயக்கவும் விடுவத்தார்கள்.வன்செயல்களில் சிறில் மத்தியூவினதும் அவரின் கையாட்களினதும் பங்கு நன்கு தெரிந்ததே.அவர்களில் சிலர் இன்னமும் அரசியலில் இருப்பதுடன் உயர் பதவிகளையும் வகிக்கிறார்கள்.

அமைச்சர்களின் பிரதிபலிப்பு 
ஜனாதிபதி ஜெயவர்தனவும் மூத்த அமைச்சர்களும் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிட்ட கருத்துகள் 1983 ஜூலை இனச்சங்காரத்தின் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்றாகும்.வன்செயல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நோக்கி அனுதாபமாக ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை.ஜே.ஆர். வன்செயலில் ஈடுபட்ட சிங்களவர்களை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.ஆனால், வன்செயல்களை சிங்கள மக்களின் தன்னியல்பான எதிர்வினை என்று கூறி நியாயப்படுத்தினார்.பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, ஜனாதிபதி பிரிவினைவாதத்தை தடைசெய்ய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.

  இராஜாங்க அமைச்சராக இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் வன்செயல்களுக்கு வெளிநாட்டுச் சக்திகளும் மறைமுக கரங்களும் பொறுப்பு என்று பேசினார்.தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையிலும் கிறிஸ்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கு இடையிலும் மோதல்களை தூண்டிவிடுவதற்கு சதித்திட்டமொன்று இருப்பதாகவும் அவர் பேசினார்.தமிழர்களைக் காப்பாற்ற இந்தியப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு 14 மணித்தியாலங்கள் எடுக்கும்.ஆனால் சிங்களவர்கள் விரும்பினால், 14 நிமிடங்களுக்குள் தமிழர்களை ஒழித்துக்கட்டிவிட முடியும் என்று அமைச்சர் காமினி திசாநாயக்க எச்சரிக்கை செய்தார்.வன்செயல்களின் விளைவாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கவேண்டியேற்பட்டுவிட்டது என்று வர்த்தக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி கவலைப்பட்டார்.நிதியமைச்சர் சேனா மற்றும் குட்டிகா பற்றி வரலாற்று விரிவுரை நிகழ்த்தினார்.கைத்தொழில் மற்றும் விஞ்ஞான விவகார அமைச்சர் சிறில் மத்தியூ இந்திய பூச்சாண்டியை காட்டியதுடன் 83 ஜூலை வன்செயல்களுக்கு வழிவகுத்த சதித்திட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருந்ததாக கூறினார்.அதை மறுதலித்த அமைச்சர் தொண்டமான் அரசாங்கத்துக்குள் இருந்த அல்லது அரசாங்கத்துக்கு நெருக்கமான சக்திகளே வன்செயல்களுக்கு பொறுப்பு என்று கூறினார்.

போல் சீகார்ட்

 83 ஜூலை வன்செயல்களுக்கு  சிங்கள மக்களே கூட்டாக பொறுப்பு என்று அவதூறு கற்பிக்க ஜனாதிபதி ஜெயவர்தன முயற்சித்த போதிலும், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவைச் சேர்ந்த போல் சீகார்ட் போன்ற மதிப்புக்குரிய அவதானிகள் உண்மை நிலையை அம்பலப்படுத்தினார்கள்.

   சீகார்ட் SriLanka ; A Mounting Tragedy of Errors  என்ற தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார் ; 

" 1983 ஜூலை வன்செயல்கள் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவெறுப்பின் விளைவான தன்னியல்பான கிளர்ச்சியோ அல்லது சில வட்டாரங்களில் கூறப்படுவதைப் போன்று  புலிகளினால் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியோ அல்ல.வன்செயல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக 13 படையினர் கொல்லப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவரவுமில்லை.அந்த வன்செயல்கள் முன்கூட்டியே  விரிவான முறையில் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவையாகும்."