(எம்.ஆர்.எம்.வசீம்)

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை சந்தையில் விற்கப்படும் விலையைவிட குறைந்த விலைக்கு சதொச ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.  அதன் பிரகாரம் எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் உடைய முகக்கவசம் ஒன்றை 10 ரூபாவுக்கு இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சில் நேற்று புதன்கிழமை நடத்திய  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வர்த்தகர்களிடமிருந்து இடைத்தரகர்கள் பெற்றுவரும் இலாபத்தை நிறுத்தி, அந்த பொருட்களை சதொச ஊடாக மக்களுக்கு குறைந்த விலைக்கு விநியோகிக்க வர்த்தக நிறுவனங்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் தற்போது சந்தையில் விற்கப்படும் விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தீர்மானித்திருக்கின்றோம். இதன் ஆரம்ப நடவடிக்கையாக 14 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவரும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம் 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். பாடசாலைகள் ஆரம்பிக்க இருப்பதால் மாணவர்களை இலக்காகக்கொண்டே இதனை முன்னெடுத்திருக்கின்றோம்.

அதேபோன்று பேராதனை பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் 25 தடவைகள் கழுவி பயன்படுத்தக்கூடிய முகக்கவசம் 200 ரூபாவுக்கு சதொச ஊடாக பெற்றுக்கொள்ளலாம். பக்றீரியாக்களில் இருந்து பாதுகாப்பு பெறும்வகையில், மிகவும் தரம்மிக்கதாகவே இது தயாரிக்கப்பட்டிருக்கின்றது. சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான அளவிலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பொது மக்கள் பயன்படுத்தும் அரிசி வகைகளையும் 100 ரூபாவுக்கு குறைவாக சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். தற்பொழுது முதல் சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கும் வெள்ளை பச்சை அரிசி 92 ரூபாவுக்கும் நாட்டரிசி 97 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அரிசிக்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயித்து அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள இருக்கின்றோம். அதன் பின்னர் நாடுமுழுவதும் நிர்ணயிக்கப்படும் விலைக்கு அசிரியை அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலை க்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கான தண்டப்பணத்தையும் ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதற்கும் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுவருகின்றோம்.

அத்துடன் விவசாயிகளுக்கு நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரித்து வழங்கும்போது அரிசியின் விலை அதிகரிக்கப்படுகின்றது. அதனால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இரண்டு தரப்பினரும் பாதிக்காமலே இதுதொடர்பில் தீர்மானிக்கவேண்டி இருக்கின்றது. அதனால் விவசாயிகளுக்கு தேவையான நீர் மற்றும் உரங்களை அரசாங்கம் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது. இதன் மூலம் விவசாயிகள் நட்டமடைவதை தடுக்கலாம்.

மேலும் கொவிட் தொற்றை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்தினதும் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பை குறைக்கும் நோக்கில் வர்த்தக அமைச்சு, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கீழ், பல் பொருட்கள் அடங்கிய (கியூசொப்) கடைகளை அமைத்து, அதன் ஊடாக சவர்க்காரம் உட்பட அனைத்துவகையான அத்தியாவசிய பொருட்களையும் சந்தையில் விற்கப்படும் விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருக்கின்றோம். தற்போது கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறான 20 கியூசொப் கடைகளை அமைத்து வருகின்றோம். நாடு குழுவதும் ஆயிரம் கியூசொப்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை தயாரித்து வருகின்றோம் என்றார்.