(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் பெண்கள் முகங்கொடுக்கும் உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில், அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் துன்புறுத்தல்கள் பற்றிய முறைப்பாடுகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றன. எனவே பெண்கள் எதிர்நோக்கும் உடலியல் ரீதியான வன்முறைகள் அதிகம் பேசப்படுவதைப்போன்று உளவியல் ரீதியான வன்முறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் மகளிர் பிரிவின் பணிப்பாளர் மாலினி உபசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி  நாட்டில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இறுக்கமான சட்டங்களின் ஊடாக மாத்திரம் முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரமுடியாது. மாறாக பெண்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சமூகக்கண்ணோட்டத்திலும் ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலத்தில் நாடளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைச்சம்பவங்கள் அதிகளவில் பதிவாகிவரும் சூழ்நிலையில், பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.