(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சுமார் 15 மாதகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான  குற்றச்சாட்டுக்கள் இதுவரையில் பலதடவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு அவருக்கெதிரான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எவையும் தற்போதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இவற்றிலிருந்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கருத்துச்சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள்சார் செயற்பாடுகளுக்காகவே அவர் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார் என்று கருதவேண்டியிருப்பதாக 11 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

அதுமாத்திரமன்றி பயங்கரவாத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக வழங்கிய வாக்குறுதிக்குப் புறம்பாக, தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு வாய்ப்பளிக்கும் இச்சட்டத்தை இலங்கை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றமை பெரிதும் விசனமளிப்பதாக் குறிப்பிட்டிருக்கும் அவ்வமைப்புக்கள்,  அச்சட்டத்தையும் அதன் பயன்பாட்டையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விரைவாக விடுதலைசெய்யும் அதேவேளை, அச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை, ஆர்டிகல் 19, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை, பிரஜைகளின் பங்களிப்பிற்கான உலகளாவிய கூட்டணி, முன்னிலை பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் செயற்திட்டம், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு, அனைத்து விதங்களிலுமான அடக்குமுறைகள் மற்றும் இனவாதத்திற்க எதிரான சர்வதேச முன்முயற்சி, இலங்கையிலுள்ள சர்வதேச செயற்பாட்டாளர்க்ள, உண்மைக்கும் நீதிக்குமான இலங்கையின் செயற்திட்டம் ஆகியவ 11 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.