பீஜிங்கின் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டவர்களை குறிவைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சீனாவின் இரு முகவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு விசரணைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, பீஜிங்கின் எதிரிகளை இலக்கு வைத்து சீனா உலகளாவிய ரீதியில் 'ஒபரேசன் பொக்ஸ் ஹண்ட்' என்ற மூலோபய நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சீனா முன்னெடுத்துள்ள உலகளாவிய மூலோபய நடவடிக்கைகளில் ஒன்றாகவுள்ள 'ஒபரேசன் பொக்ஸ் ஹண்ட்' நடவடிக்கையில் சீனாவின் பதிவு செய்யப்படாத முகவர்களாக செயல்படுவதற்கும் சதி செய்வதற்கும் துணைபோயிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டானது அமெக்காவில் ஒன்பது பிரதிவாதிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சீனாவின் 'ஒபரேசன் பொக்ஸ் ஹண்ட்' என்ற மூலோபாயமானது, உலக நாடுகளில் உள்ளவர்களை சீனாவுக்கு மீண்டும் திரும்பும்படி கட்டாயப்படுத்தும் முயற்சியில் இரகசியமாக செயல்படும் நீதிக் கட்டமைப்பாக உள்ளது. 

அதாவது, சொந்த நாட்டுக்கு 'திருப்பி அனுப்பும் அதிகாரங்களைக் கொண்ட குழு' போன்று செயற்படுகின்றது என்பது அமெரிக்க அதிகாரிகளின் கருத்தாகவுள்ளது.

எனினும், 'ஒபரேசன் பொக்ஸ் ஹண்ட்' என்ற நடவடிக்கையானது தமது நாட்டின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், மோடிகளை மேற்கொண்டு இலாபங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களை வேட்டையாடுவதில் ஒரு 'நியாயமான காரணம்' உள்ளதால் அந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது என்றும் பீஜிங் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். 

அமெரிக்காவில், கடந்த வருடம் ஒக்டோபரில், பெயரிடப்படாத சீனாவின் இலக்கின் அடிப்படையில், அச்சுறுத்தல், துன்புறுத்தல், கண்காணித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கிய சர்வதேச பிரசாரச் செயற்பாட்டில் பங்கேற்றமைக்காக ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர். 

இவ்வாறிருக்க, 50 வயதான அரச வழக்கறிஞர் துலான் என்பவர், துன்புறுத்தல் பிரச்சாரத்தை இயக்குவதற்காக 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றதாகவும், பின்னர் அவர் அதுபற்றிய விசாரணைகளைத் தடுத்ததாகவும் சீனாவினால் குற்றம் சாட்டப்பட்டார்.

அதன்பின்னர், அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பிரதிவாதிகள் அவரை சீனாவுக்கு திரும்பும்படி வற்புறுத்தினர். 

அதுமட்டுமன்றி, அவர்கள் அவரது மகளுக்கு அழுத்தங்களை வழங்கியதோடு தொடர்ச்சியாக அச்சுறுத்தும் தகவல்களையும் பரிமாற்றிய வண்ணம் இருந்துள்ளனர். 

எனினும், அவர்கள் அந்த அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு அடி பணியாது இருந்த சமயத்தில்  2018 செப்டம்பரில் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தில் 'நீங்கள் மீண்டும் தாயக  நிலப்பகுதிக்குச் சென்று 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க விரும்பினால், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாகவும் சரியாகவம் இருப்பார்கள். அதுதான் இந்த விடயத்தின் முடிவு' என்ற வாக்கியங்கள் அடங்கிய அறிவித்தலொன்று ஒட்டப்படிருந்தது. 

எனினும், இந்த விடயம் அமெரிக்க அதிகாரிகளின் காதுகளுக்குச் சென்றடைந்தமையால், சீனாவின் ஒபரேசன் பொக்ஸ் ஹண்ட் முகவர்களின் முயற்சி வெற்றிபெற்றிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில்தான் தற்போது இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அந்த விடயங்களை அமெரிக்க பகிரங்கப்படுத்திய கையோடு சீனா அதற்கு பிரதிபலிப்பைச் செய்திருக்கின்றது. 

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வழமையான வாராந்த செய்தியாளர் மாநாட்டில், பொக்ஸ் ஹன்ட் நடவடிக்கையை ஆதரித்தது கருத்துக்களை வெளியிட்டது மட்டுமல்லாது, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே தமது முகவர்கள் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 'தப்பியோடியவர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை மீட்பதற்கான சீனாவின் பணிகளை அமெரிக்கா அவதூறாகப் பேசுகிறது' என்றும் பதிலுக்கு குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, தமது மூலோபாய நடவடிக்கைக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்களை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்றும் திடமாகக் கூறியிருக்கின்றார். 

அதேநேரம், சீனாவில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா உள்ளது என்பதை அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜாவோ அதுபற்றி தமது நாடு முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கா இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைளை விரும்பும் மக்களின் எதிர்பர்ப்புகளுக்கு அமைவாகவே சீன நீதி அமைப்பு இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதாக குறிப்பிட்டவர், ஜனாதிபதி ஷி ஜின் பிங்  தலைமையின் கீழ் இந்த செயற்றிட்டதினை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

ஆனால் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் எதிர்ப்பாளர்களையும் எதிரிகளையும் குறிவைத்து இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக வொஷிங்டன் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளது.

அதுமட்டுமன்றி சீனாவில் மோசடிகளுக்கு இடமளித்தல், அரசாங்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் இலஞ்சம் வாங்குதல் ஆகியவை இடம்பெறுவதாகவும், மேலும் வெளிநாடுகளில் இலக்கு வைக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு சீனா கடுமையான தண்டனைகளை விதிக்கின்றது என்றும் அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டுள்ளது. 

மேலும், சீனாவின் பதிவு செய்யப்படாத முகவர்களாக செயற்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதற்காக தமது நாட்டில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 

அனைத்து பிரதிவாதிகள் மீதும் சர்வதேச மற்றும் சர்வதேச வேட்டையில் ஈடுபட சதி செய்ததாக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு பகிரங்கப்படுத்தப்படுகிறது என்று அமெரிக்க நீதித்துறை மேலும் குறிப்பிடுகின்றது. 

ஒபரேசன் பொக்ஸ் ஹண்ட் என்ற மூலோபாயச் செயற்பாட்டை ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் தலைமைத்துவத்தின் கீழான வழிகாட்டலில் 2014ஜுன் மாதம் சீனா உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. 

அதன்பின்னர் தற்போது வரையில் உலகளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதிகம் வேண்டப்பட்டவர்களாக அடையாளமிடப்பட்டுள்ளதோடு, அவர்களில் 40பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டு சீனாவுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அல்லது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

2015ஆம் ஆண்டில் மாத்திரம் 680 பேர் சீனாவுக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இதில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் 2015 ஆம் ஆண்டு நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் தங்கியிருந்த செங் நிங் என்ற பெண்மனி கைது செய்யப்பட்டு சீனாவுக்கு அழைத்துச் செல்லபட்டமையே மிகப்பெரும் வெற்றியாக தற்போதும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி டெய்லி மெயில்

தமிழில் ஆர்.ராம்