இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கன் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கன், இரு நாட்கள் பயணமாக நேற்று இரவு இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு வருகைதந்திருந்தார்.

அன்டனி பிளிங்கன் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர்  இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோடியையும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கன் சந்திக்கவுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம், ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துதல், பாதுகாப்பு, வர்த்தக உறவை பலப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஆலோசிக்கப்படும் என்று இந்தியத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு போதுமானளவு கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்களை தொடர்ந்து விநியோகிப்பது குறித்தும் பேசப்படவுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 3 ஆவது அலையின் பெரும் தாக்கத்தால் இந்தியா தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அதன் உற்பத்தியில் கவனம் செலுத்திய நிலையில், தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது.

எவ்வாறாயினும் கடந்த மே மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் மேற்கொண்டு அதனை ஏனைய நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில், இந்தியா மீண்டும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆரம்பித்து உலகளாவிய ரீதியில் விநியோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி த டைம்ஸ் ஒப் இந்தியா

தமிழில் வி.பி.