சீனாவில் அண்மைய வருடங்களாக ஒரு ரசிகர் கலாசாரம் (Fandom culture ) விரைவேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. சீனமொழியில் இது " ஃபான்குவான்" கலாசாரம் (Fanquan culture) என்று அழைக்கப்படுகிறது.உணர்ச்சிவயப்பட்ட -- விசுவாசமான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ரசிகர் வட்டங்கள்(Fan circle) முன்னுக்கு வந்துகொண்டிருக்கின்ற பொப் பாடகர்கள் அல்லது நடிகர்களை சாத்தியமானளவுக்கு பிரபலமானவர்களாக்குவதற்கும் செல்வாக்குமிக்கவர்களாக்குவதற்கும் சுயமாக முன்வந்து தங்களது நேரத்தையும் பணத்தையும் அறிவையும் பயன்படுத்துகிறார்கள்.

2020 ஆம் ஆண்டில் சீனாவின் மிகவும் இளவயது நெற்றிசன்கள் ( இன்ரர்நெற்றை மிகுதியும் பயன்படுத்துவோர்)சுமார் 18  கோடி 30 இலட்சம் பேர் தங்களது ஹீரோக்களின் (Idols) மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அண்மைய அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்தது.

## ரசிகர் விசுவாசம் கண்மூடித்தனமானதாகவும் கெடுதியானதாகவும் மாறி இணையவெளியில் கொச்சைத்தனமான தகவல்களை பதிவேற்றம் செய்யவும்(Online trolling) வதந்திகளை பதிவேற்றம் செய்யவும் இணையவெளியில் ஆட்களை இலக்குவைக்கவும் உணர்ச்சிவசப்பட்டு கொள்வனவுகளில் ஈடுபடவும்  வழிவகுக்கும்.இந்த பிரச்சினைகளை கையாளுவதற்கு சீன அதிகாரிகள் ரசிகர் கலாசாரத்தை ஒழுங்கமைக்கும்  நடவடிக்கைளில் இறங்கியிருக்கிறார்கள்.

பெய்ஜிங், ஜூலை 25,(சின்ஹுவா) ஷென் சூ ( Chen Xue)என்ற யுவதி தினமும் காலையில் தனது பொப் இசை நட்சத்திரம் லுவோ யிஷூ பற்றிய புதிய செய்திகளை அறிந்துகொள்வதற்காக சமூக ஊடகங்களை ஆராய்வதுடன் ஏற்கெனவே எண்ணற்ற தடவைகள் கேட்டும் பார்த்தும் ரசித்த லுவோவின் பாடல்களையும் இசை வீடியோக்களையும் மீண்டும் ரசிப்பார். லுவோவின் நேயர் விருப்பக் கணிப்பீட்டு எண்ணிக்கை சமூக ஊடகங்களில் உயர்த்துவதற்காகவும் அவரின் பாடல்களின் குறுவட்டுகள் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஷென் இவ்வாறு செய்கிறார்.

  சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கைச் சேர்ந்த 23 வயதான இந்த யுவதி இவ்வருட முற்பகுதியில் லுவோ  போட்டியொன்றில் பங்குபற்றியபோது அவர்மீது ஒரு நேசத்தை வளர்த்துக்கொண்டார்.அன்றிலிருந்து தினமும் காலையில் ஷென் இவ்வாறு செய்கிறார்.

    ஷென் மாத்திரமல்ல

  சமூக ஊடக வலைப்பின்னல் செயலியான(Social Networking app QQ )  கியூ.கியூ.வில் 1000 உறுப்பினர்களைக் கொண்ட சம்பாஷணை குழுவிலும் ஷென் இணைந்து தீவிரமாக  இயங்குகிறார்.ஷென்னைப் போன்ற உறுப்பினர்கள் பொப் நட்சத்திரம் லுவோவின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.திறமைப் போட்டியின்போது அவருக்கு வாக்களிப்பதற்காக அவர்கள் பெருமளவு பணத்தை செலவுசெய்யவும் தயாராயிருக்கிறார்கள்.இணையவெளியில் லுவோவைப் பற்றி அனுகூலமான கருத்துக்களை அவர்கள் பதிவிடுவதுடன் போட்டி நிகழ்ச்சிக்கான பல டிக்கெட்டுக்களையும் அல்பங்களையும் வாங்குகிறார்கள். அவரின் விளம்பரப்பலகைகளுக்காக  பெருவாரியான மக்களிடமிருந்து இந்த ரசிகர்கள் பணம் வசூலிக்கிறார்கள்.

போட்டி நிகழ்ச்சிகளில் வாக்களிப்பதற்காகவும் பணம் திரட்டுவதற்காகவும் ரசிகர்களுக்காக  கையடக்கத்தொலைபேசியில் வடிவமைக்கப்பட்ட செயலியை ரசிகர் ஒருவர் பரீட்சித்துப் பார்க்கிறார்( ஜூலை 2021).

சீன சமூக ஊடகங்களில் இத்தகைய ரசிகர் குழுக்கள் ஃபான்குவான் ( ரசிகர் வட்டங்கள்) என்று குறிப்பிப்படுகின்றன.இந்த வட்டங்கள் உணர்ச்சிவசப்பட்ட --- விசுவாசமான ரசிகர்களின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களாக அமைந்திருக்கின்றன.அவர்களின் ஹீரோக்களாக பெரும்பாலும் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் நடிகர்கள் அல்லது பொப் இசைக்கலைஞர்களே இருக்கிறார்கள். இந்த ஹீரோக்களை சாத்தியமானளவு பிரபலமானவர்களாக்குவதற்கு ரசிகர் வட்டங்கள் சுயமாக தமது விருப்பத்தின்பேரில் தங்களது நேரத்தையும் பணத்தையும் அறிவையும் செலவிடுகிறார்கள்.

  ரசிகர் வட்ட உறுப்பினர்கள் பெரும்பாலும் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களாகவே (Generation Zers) இருக்கிறார்கள்.அவர்களின் எண்ணிக்கை அண்மைய வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது.2020 ஆம் ஆண்டில் சீனாவின் மிகவும் இளவயது நெற்றிசன்கள் 18 கோடி 30 இலட்சம் பேரில் சுமார் 8 சதவீதத்தினர் தங்களது ஹீரோக்களின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சீன இணைய வலைப்பின்னல்  தகவல் நிலையத்தினால்( China Internet Network Information Center ) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது

" ரசிகர் வட்டங்களின் இந்த வளர்ச்சி விளங்கிக்கொள்ளக்கூடியதே.ஏனென்றால், அவை சமூகமயமாதலுக்கும் மனநிறைவுக்குமான ரசிகர்களின் தேவைகளை நிறைவுசெய்கின்றன" என்று லியாவோனிங் சமூக விஞ்ஞான அகாடமியின் கல்விமான் ஷாங் சினிங் கூறினார்.

 ஹீரோக்களை அல்லது நட்சத்திரங்களை உருவாக்குவதில் ரசிகர்கள்  ஒரு அதிகாரம் அல்லது உரிமையைக் கொண்டிருப்பதற்கு ரசிகர் வட்டங்கள் அனுமதிக்கின்றன.ஏனென்றால், ரசிகர்கள் சொந்த முயற்சிகளினூடாக தங்களது ஹீரோக்கள் புகழையும் வெற்றியையும் அடைய உதவுகிறார்கள் என்று ஷாங் குறிப்பிட்டார்.

  " ரசிகர்கள் என்ற வகையில், எமது ஹீரோக்கள் தங்கள் கனவுகளை நனவாக்க நாம் சகலதையும் செய்ய விரும்புகிறோம்.அது எம்மை மகிழ்ச்சிப்படுத்தும்" என்று ஷென் கூறினார்.

  உண்மையில், ரசிகர்கள் தங்களது ஹீரோக்களின் நேயர் விருப்ப மதிப்பீட்டு எண்ணிக்கையை சமூக ஊடகங்களில் உயர்த்துவதற்கு உதவுகிறார்கள்.இதன் மூலமாக ஹீரோக்கள் பிரபலமடையவும் மேம்படவும் ரசிகர்கள் பாடுபடுகிறார்கள்.சீனாவில்  நேயர் விருப்பத் தரமதிப்பீடு வழமையாக  நட்சத்திரங்கள் போட்டிகளில் வெற்றிபெறவும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரதான பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்கும் வர்த்தக நிறுவனங்களின்  விளம்பர ஒப்பந்தங்களை பெறுவதற்கும்  உதவுகிறது.

  ஆனால், அதீத ஊக்கமுடைய ரசிகர் கலாசாரம் இரு பக்கமும் கூரான ஒரு வாள் போன்றதாகும்.ஏனென்றால் ரசிகர் விசவாசம் கண்மூடித்தனமானதாகவும் கெடுதியானதாகவும் மாறலாம்.

  பிரபலமானவர்கள் அவர்களது ரசிகர்களினால் வெறுப்பட்டும் வகையில் பின்தொடரப்படுகின்ற  அல்லது மற்றைய நட்சத்திரங்களின் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகக்கூடிய சம்பவங்கள் அரிது என்று சொல்வதற்கில்லை.தங்களது ஹீரோக்களின் விளம்பர அங்கீகாரத்தைப் பெற்ற பொருட்களை விழுந்தடித்துக்கொண்டு வாங்குவதற்காக மிகவும் இளவயது ரசிகர்கள் தங்களது பெற்றோரின் பணத்தையும் கடனட்டையையும் திருடும் சம்பவங்கள் பற்றிய செய்திகளும் வெளியாகியிருக்கின்றன.

   " யூத் வித் யூ " என்ற பரந்தளவு பிரபலமான போட்டி நிதழ்ச்சியொன்றின் ரசிகர்கள் ஏராளமான பால் உற்பத்தி பொருட்களை குப்பையில் கொட்டியதை காண்பிக்கும் காட்சிகள் மே மாதம்  இணையத்தில் வெளியாகின. ரசிகர்கள் தங்களது விருப்பத்துக்குரிய போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதை அனுமதிக்கும் வகையிலான குறியீடு அந்த பால் உற்பத்திகளின் போத்தல் மூடிகளின் உள்ளே அச்சிடப்பட்டிருந்ததே அவ்வாறு அவர்கள் செய்ததறகான காரணமாகும். இந்த இணைய காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருந்தன.அதனால் பெய்ஜிங் மாநகர தொலைக்காட்சி அதிகாரிகள் அந்த போட்டி நிகழ்ச்சியின் இறுதிக்கு முன்னதாக  அதை இடைநிறுத்தவேண்டியேற்பட்டது.

 கிழக்கு சீனாவின் ஃபியூயியான் மாகாணத்தில் ஃபூஷோ என்ற நகரில் கலைநிகழ்ச்சியொன்றில் திரண்ட ரசிகர்கள்(2019).

 பால் உற்பத்திகள் விரயம் செய்யப்பட்ட விவகாரம் போட்டி நிகழ்ச்சியின் மூலதன  நடவடிகக்கைகளுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாகும் என்று கிழக்கு சீனாவின் நோர்மல் பல்கலைக்கழகத்தின்  தொலைத்தொடர்புகள் பேராசிரியர் வூ ஷாங்ஷாங் கூறினார்.

   " மேலோட்டமாக பார்க்கும்போது போட்டி நிகழ்ச்சி வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.ஆனால் சாராம்சத்தில் நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் பெரும் பணத்தை சம்பாதிப்பதிலேயே அது முடிகிறது" என்று வூ சொன்னார்.

    " பெரிய மேடைகளும் பணமும் சம்பந்தப்படும்போது ரசிகர் வட்டங்கள் பெருமளவுக்கு நச்சுத்தனமானவையாகவும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தை கொண்டவையாகவும் மாறிவிடுகின்றன.அரசு மட்டத்தில் ஒழுங்குவிதிகள் அவசியமானவையாகும் ." என்று ஷாங் கூறினார்.

  இணையவெளியில் கொச்சைத்தனமான விடயங்களை பதிவேற்றம் செய்தல், வதந்திகளைப் பரப்புதல், குறிப்பிட்ட ஆட்களை இலக்குவைத்து இணையவெளியில் பதிவுகளைச்செய்தல் உட்பட அதிகரித்துவரும் ரசிகர் வட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இலக்குவைத்து இரு மாத கால நடவடிக்கைகளை சீனாவின் இணையவெளி கண்காணிப்பு அமைப்பான ' சீன இணையவெளி நிருவாகம் ( Cyberspace Administration of China) ஜூனில் தொடங்கியது.

  18 வயதுக்கு குறைந்தவர்களை அவர்களது ஹீரோக்களுக்கு வாக்களிக்க தூண்டும் செயற்பாடுகளுக்கும் ஹீரோக்களை ஆதரிக்க பெருமளவு பணத்தை திரட்டி செலவுசெய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணையவெளி கண்காணிப்பு நிருவாகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

  வர்த்தக நோக்கங்களுக்காக ரசிகர்களிடமிருந்து பணத்தை திரட்டக்கூடாது என்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீன ஆற்றுகை கலைகள் சங்கம் (China Association of Performing A)rtsஅறிவுறுத்தல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

   "  சட்டத்துக்கு ஏற்றமுறையிலும் அறிவுக்கு பொருத்தமாகவும் போட்டி நிகழ்ச்சிகளை ஆதரிப்பதற்கு ஹீரோக்களும் அவர்களது முகவர் அமைப்புக்களும் ரசிகர்களுக்கு வழிகாட்டவும் வேண்டும் " என்று ஷாங் கூறினார்.

  பதின் அகவை (Teenage)ரசிகர்களின் மனநலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று சீனாவின் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தின்  ஒரு பேராசிரியரான ஷெங் நிங் கூறினார்." நாம் அவர்கள் மீது கூடுதல்  கவனம் செலுத்தவேண்டும்.வாழ்வின் கனிவை அவர்கள் இப்போதே உணரக்கூடியதாக உளவியல் ஆலோசனைகள் நடத்தப்படவேண்டும்" என்றும் அவர் கூறினார்.

  சிறப்பான ஒழுங்கு விதிகள் வகுக்கப்படுமானால் ரசிகர் வட்டங்கள் கூடுதலான அளவுக்கு நேர்மறையான ஒரு பாத்திரத்தை வகிக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ஹீரோ முகவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வென் ரிங் ( புனைபெயர் ) என்ற பெண்மணி சொன்னார்.

 வடமேற்கு சீனாவில் உள்ள நிங்சியா சுயாட்சிப்பிரதேசத்தில் சிறுவர் நலன்புரி நிலையம் ஒன்றுக்கு அன்பளிப்பு செய்வதற்காக ரசிகர் வட்டம் ஒன்றினால் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள்.

  " நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதும் ஒழுங்கு கட்டுப்பாடுடையதுமான ரசிகர் வட்டங்கள் கடந்த வருடம் கொவிட் 19 பெருந்தொற்று பரவிய பிறகு அதற்கு எதிராக  வூஹான் நகரம் நடத்திய போராட்டத்தில் பெருமளவு பங்களிப்பைச் செய்தன.பண நன்கொடைகளையும் மருத்துவ விநியோகங்களையும் அந்த ரசிகர் வட்டங்கள் செய்தன என்று வென் கூறினார்." நன்கு நிருவகிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுமானால்,அந்த வட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகிக்கும்".