அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் திங்கட்கிழமை(26) பிற்பகல் வேளையில் பலத்த காற்றுடனான மழை பெய்ததன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. 

பலத்த காற்றின் காரணமாக, அக்கரைப்பற்று பாடசாலையொன்றுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் ஒன்றும் முறிந்து வீழ்ந்துள்ளது. இத்தொலைத் தொடர்பு கோபுரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், கோபுரத்தை அண்மித்திருந்த சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அப்பிரதேச மக்களின் உடைமைகள் சிலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

அத்துடன், மின்கம்பங்களும் சேதமடைந்ததால் மின் இணைப்புகளும் சில இடங்களில் துண்டிக்கப்பட்டன.

இந்த கோபுரம்  அமைக்க முன்னர், குறித்த பிரதேச மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தும் அந்த எதிர்ப்புக்களை மீறியே இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  சம்பவ இடத்துக்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.