சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும்: மாநாட்டில் ஜனாதிபதி...

By J.G.Stephan

27 Jul, 2021 | 01:03 PM
image

எதிர்காலச் சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக, சேதன விவசாயத்துக்கான இலங்கையின்  அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என்று தான் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கான தளத்தை அமைக்கும் வகையில், இத்தாலியின் ரோம் நகரில் நேற்றைய தினம் (26), ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டின் முன் அமர்வு நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது, காணொளித் தொழில்நுட்பத்தின்  ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தலைமையில் நடைபெறும் இந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


இந்த மாநாட்டில், 2030க்குள் எதிர்பார்க்கப்படும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உணவு முறைகளின் தாக்கம் குறித்துக் கலந்துரையாடப்படும். இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பல துறைகளின் பிரதிநிதிகள், புதிய அணுகுமுறையுடன் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவர்களின் புரிதலை அவர்கள் விரிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். சேதன விவசாயம் என்பது, எமது நாட்டுக்குப் புதிதல்ல. புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் இதில் புத்துயிர்ப்புப் பெற முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உணவு முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும். தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது. 

மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும். இவற்றைத் தனியாக எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உயிர்ப் பல்வகைமை இழப்பை எதிர்த்துப் போராடுதல் போன்ற விடயங்கள் குறித்து, நேற்றைய மாநாட்டில் உரையாற்றிய அரச தலைவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.

ரோம் நகரில் நடைபெறும் ஐ.நா உணவு முறைமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை…

இன்றைய தினம் இடம்பெறும் ஐ.நா உணவு முறைமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப மெய்நிகர் அமர்வில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க, அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவர்களின் புரிதலை அவர்கள் விரிவுபடுத்த வேண்டும்.

இந்த முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும்.

தற்போதைய கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது. மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும்.

இவற்றைத் தனிப்பட்ட நாடுகளால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும்.

உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், உயிர்ப் பல்வகைமை இழப்பை எதிர்த்துப் போராடுவதற்கும், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிலைபேறான முறையில் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், தீர்க்கமானதும் அவசரமானதுமான பல்தரப்பு நடவடிக்கை தேவையாகும்.

எமக்கு முன்னால் உள்ள சவால்கள் அச்சுறுத்தலானவை. எவ்வாறாயினும், அவற்றை வெற்றிகொள்வதற்கான தீர்மானத்தில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இறக்குமதியை இலங்கை தடை செய்தது.

இந்தத் தீர்மானமானது, பரந்துபட்ட சுற்றுச்சூழல் கரிசனைகளையும் தெளிவான மற்றும் தற்போதைய பொதுச் சுகாதார கரிசனைகளையும் கருத்திற்கொண் எடுக்கப்பட்டதாகும். பல தசாப்தங்களாக, இலங்கை அதன் விளைபொருட்களுக்காகச் செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களையே அதிகமாக நம்பியிருந்தது.

பல தசாப்தங்களாக, மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் விவசாய இரசாயனங்கள் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி, நிலத்தடி நீரும் மாசடைவதற்கு வழிவகுத்தது. இது, சுற்றுச்சூழல் அழிவு, நீர் மாசடைதல் ஆகியவற்றை மேலும் மோசமாக்கியதுடன், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தையும் அதிகரித்தது. இது இந்த நாட்டின் விவசாய மையப்பகுதியில், பரவலான நாட்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்ததுடன், பொதுமக்களிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கும் பங்களித்தது.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, இந்த கடுமையான பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கானதாகும். குறுகிய காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சில பிரச்சினைகள் இருந்தபோதிலும், இந்தத் தீர்மானமானது, நீண்ட காலத்தில் சேதன விவசாயத்தின் மூலமான ஆரோக்கியமான, அதிக சுற்றுச்சூழல் நன்மைகொண்ட மிகவும் தேவையான ஒரு தேசிய மாற்றத்துக்கு உதவும்.

இந்த மாற்றம் நடைபெறுவதால், எனது அரசாங்கமானது, எமது விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த வர்த்தகங்களுக்கும் உதவும். இந்த முயற்சியில், சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாய பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும்.

சேதன விவசாயம் எங்களுக்குப் புதிதல்ல. ஆனால், எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து, புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் புத்துயிர்ப் பெற முனைவது ஒரு வரலாற்று நடைமுறையாகும்.

அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் முதலீடு என்பவற்றின் ஊடாக, சேதன உரங்கள், விவசாயம் மற்றும் ஏற்றுமதியின் உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்த உதவுமாறு பல்தரப்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள், காலநிலை நிதியங்கள், தொழில்நுட்ப அமைப்புகள், வல்லுநர்கள் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த மேம்பாடுகளின் மூலம், இலங்கை தனது உணவு முறையை நிலையான முறையில் மாற்றியமைக்க முடியும் என்பதுடன், எமது மக்களுக்கான உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

பேண்தகு விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு ஆகியவை, 2030ஆம் ஆண்டுக்கான ஐ.நாவின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு முக்கியமானதாகும்.

கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு முன்பு கூட, இந்த இலக்குகள் சரியான நேரத்தில் அடையப்பெற வாய்ப்பில்லை என்பது மிகுந்த கரிசனைக்குரிய ஒன்றாக இருந்தது.

இந்தச் சூழலில், இந்த முக்கியமான விடயங்களில் உலகளாவிய கொள்கை ஒருங்கிணைப்பை மேற்கொள்வதில் உலக உணவுப் பாதுகாப்பு குழுவின் முக்கிய பணி மிகவும் பாராட்டத்தக்கதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதுமாகும்.

முடிவாக, எமது எதிர்காலச் சந்ததியினருக்காக உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதி செய்வதற்காக, உலக உணவு முறையை நிலையான முறையில் மாற்றுவதற்குத் தேவையான தைரியமான நடவடிக்கைகளை எடுக்க, இலங்கையின் உதாரணம், மேலும் பல நாடுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right